2017-03-09 15:31:00

சங்கடத்தில் ஆழ்த்தும் இயேசுவின் பாடுகளும், மரணமும்


மார்ச்,09,2017. இயேசுவின் பாடுகளிலும், மரணத்திலும் நாம் காணும் உண்மைகள், நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துகின்றன என்று பிரான்சிஸ்கன் அருள்பணியாளர் ஜூலியோ மிக்கேலினி அவர்கள், இவ்வியாழன் காலை தியான உரையில் கூறினார்.

உரோம் நகருக்கு அருகே, அரிச்சா எனுமிடத்தில் அமைந்துள்ள தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட உயர் அதிகாரிகளும் மேற்கொண்டுவரும் ஆண்டு தியானத்தின் ஐந்தாம் நாள் காலையில், அருள்பணி மிக்கேலினி அவர்கள், இயேசுவின் மரணத்தை தன் தியான உரையின் மையமாக்கினார்.

இயேசு, சிலுவையில் வெளியிட்ட ஓலங்கள், தந்தையால் கைவிடப்பட்டதைப்போல் உணர்ந்த தருணங்கள், அவர் அடைந்த உடல் வேதனை என்ற அனைத்துமே, சீடர்கள் உட்பட, பலருக்கு புரிய இயலாத இடறலாக இருந்தன என்று, அருள்பணி மிக்கேலினி அவர்கள், வலியுறுத்திக் கூறினார்.

மறுகன்னத்தைக் காட்டவேண்டும் என்று போதித்த கிறிஸ்து, சிலுவையில் தன் விலாவைக் குத்தித் திறந்த படைவீரருக்கு, மன்னிப்பு வழங்கும் வகையில், இரத்தத்தையும், நீரையும் வெளியிட்டார் என்று, தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார், அருள்பணி மிக்கேலினி.

இயேசு, சிலுவையில் அறையுண்டபோது, தன் தாயை, யோவானின் தாயாக அளித்தார் என்று நற்செய்தியாளர் யோவான் கூறும்போது, நற்செய்தியாளர் மத்தேயு, 'யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியா' என்று குறிப்பிடுவதன் வழியாக, அன்னை மரியாவை நம் அனைவருக்கும் தாயாகக் காட்டுகிறார் என்றும், அருள்பணி மிக்கேலினி அவர்கள், தன் தியான உரையில் குறிப்பிட்டார்.

திருத்தந்தையும், திருப்பீட உயர் அதிகாரிகளும் மேற்கொண்டுள்ள இந்த ஆண்டு தியானம், மார்ச் 10, இவ்வெள்ளி மதியம் நிறைவுக்கு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.