2017-03-10 15:25:00

டிரம்ப்பின் திட்டம், அமெரிக்க விழுமியங்களுக்கு முரணானது


மார்ச்,10,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டில், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் குடியேற்றத்தை நிறுத்துவதற்கு, அந்நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் திட்டமிட்டு வருவது, அமெரிக்க சமுதாயத்தின் பாரம்பரியத்திற்கு எதிரானது என்று, உலகளாவிய இயேசு சபை தலைவர் அருள்பணி அர்த்தூரோ சோசா (Arturo Sosa) அவர்கள் கூறினார்.

இவ்வாரத்தில் ANSA செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ள அருள்பணி சோசா அவர்கள், மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவது, மற்றும், ஆறு முஸ்லிம் நாடுகளின் மக்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது, ஆகியவை குறித்த டிரம்ப் அவர்களின் திட்டம், அமெரிக்க மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களை மீறுவதாக உள்ளது என்று கூறினார்.

பயங்கரவாதத்தோடு இஸ்லாமைத் தொடர்புபடுத்த முயற்சிப்பது, அறிவற்றதனம் என்றும் கூறிய அருள்பணி சோசா அவர்கள், குடியேற்றதாரரைத் தடைசெய்வதற்கு சுவர்களைக் கட்டுவது, மனிதமற்ற செயல் எனவும், குறை கூறினார்.

துன்பச் சூழலை எதிர்கொள்கின்ற குடியேற்றதாரர், நாடுகளுக்குள் நுழைவதற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி, வேறு வழிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்பதால்,  தடைச் சுவர்கள் பயனற்றவை என்றும், இயேசு சபை தலைவர் அருள்பணி சோசா அவர்கள் கூறினார்.

ஆதாரம் : ANSA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.