2017-03-10 14:46:00

திருத்தந்தையின் ஆண்டு தியானம் நிறைவுற்றது


மார்ச்,10,2017. உரோம் நகருக்கு 16 மைல் தூரத்திலுள்ள அரிச்சாவில் அமைந்துள்ள தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், ஆண்டு தியானத்தை நிறைவு செய்து, இவ்வெள்ளி முற்பகல் 11.30 மணிக்கு வத்திக்கான் வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இவ்வெள்ளி காலையில், தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், சிரியா நாட்டுக்காகத் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அலெப்போவில் வாழும் ஏழை மக்களுக்கென ஒரு இலட்சம் யூரோக்களை வழங்கியுள்ளார். இந்நன்கொடைக்கு, திருப்பீட தலைமையகமும் உதவியுள்ளது. இந்நிதி, திருப்பீடத்தில் தர்மக் காரியங்கள் ஆற்றும் அலுவலகம் வழியாக, புனித பூமி பாதுகாவலருக்கு அனுப்பப்படும் என, திருப்பீட உதவிச் செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

இன்னும், தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், தியான உரைகளாற்றிய பிரான்சிஸ்கன் அருள்பணியாளர் ஜூலியோ மிக்கேலினி அவர்களுக்கு, நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 05, ஞாயிறு மாலை, திருத்தந்தையும், திருப்பீட உயர் அதிகாரிகளும் மேற்கொண்ட ஆண்டு தியானம், மார்ச் 10, இவ்வெள்ளியன்று நிறைவு பெற்றது.

மேலும், இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு, உரோம் மறைமாவட்ட தலைமையகத்தில், அம்மறைமாவட்ட தலைமைப் பங்கு அருள்பணியாளர்களைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிரியாவில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்தில் ஐ.நா. தலைமையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் உரையாடலின் ஐந்தாவது அமர்வு, மார்ச் 23ம் தேதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3ம் தேதி நடந்த உரையாடலில், நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக, ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

இன்னும், இவ்வெள்ளியன்று திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், “தவக்காலத்தில், சோகமான முகங்களைக் கொண்டிருக்காமல், புன்சிரிப்பு முகங்களுடன், நோன்பைக்  கடைப்பிடிப்போம்” என்ற வார்த்தைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.