2017-03-11 14:22:00

உரையாடல், செவிமடுத்தல் வழியாக சிறந்த உலகை அமைக்க அழைப்பு


மார்ச்,11,2017. உரையாடல் மற்றும், செவிமடுத்தல் வழியாக, அனைத்து மக்களையும் வரவேற்கின்ற மற்றும் மதிக்கின்ற ஓர் இடமாக இவ்வுலகை அமைப்பதற்கு நம்மால் உதவ முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

“Telefono Amico Italia” அதாவது இத்தாலிய தொலைபேசி நண்பர் என்ற தன்னார்வ அமைப்பின் நானூறு உறுப்பினர்களை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிமை, இழப்பு, புரிந்துகொள்ளப்படாமை போன்ற நிலைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு, இந்த அமைப்பினர் ஆற்றிவரும் சேவைகளை ஊக்கப்படுத்தினார்.

பல்வேறு கடினமான நிலைகள் எதிர்கொள்ளப்படும் இன்றைய சமூகச் சூழலில், இந்த அமைப்பினரின் பணி மிகவும் முக்கியமானது என்றுரைத்த திருத்தந்தை, உரையாடலின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.

ஒருவர் மற்றவரின் தேவைகளை அறிந்து, புரிந்துகொள்ளவும், ஒருவர் மற்றவரை ஏற்று, மதிக்கவும் உரையாடல் உதவுகின்றது எனவும் கூறியத் திருத்தந்தை, ஒருவருக்கு மற்றவர் அச்சுறுத்தலாக இல்லை, ஆனால், அவர்கள், கடவுளின் கொடையாக இருக்கின்றனர் என்பதை, உரையாடல் வழியாக, கற்றுக்கொள்ள முடிகின்றது எனவும் கூறினார்.

பிறர் பேசுவதைக் கேட்பதற்கு, பொறுமையும், கவனமும் தேவைப்படுகின்றன என்றும், அமைதியாக இருப்பவர்களால்தான், கடவுளுக்கும், தேவையில் இருக்கும் உடன்பிறப்புகளுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் செவிமடுக்க முடியும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

Telefono Amico அல்லது Voce Amica என்ற தொலைபேசி நண்பர் அமைப்பு, 1956ம் ஆண்டில் உரோம் நகரில், தன்னார்வலர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், 1963ம் ஆண்டில் இது, சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது. பின்னர், இவ்வமைப்பு, மிலான், ஜெனோவா, தூரின், வரேசே, பலேர்மோ போன்ற இத்தாலிய நகரங்களில் பரவியது. 1967ம் ஆண்டில், இது ஒரு கழகமாகச் செயல்படத் தொடங்கியது.

தனிமையில் வாடுவோர், பல்வேறு இழப்புக்களைச் சந்தித்திருப்போர், புரிந்துகொள்ளப்பட வேண்டுமென்று விரும்புவோர், நன்னெறி முறையில் ஆதரவு தேவைப்படுவோர், உரையாடுவதற்கு ஆளின்றி இருப்போர் போன்ற மக்களுக்கு, இந்தத் தொலைபேசி நண்பர் அமைப்பினர் உதவி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.