2017-03-11 14:29:00

கொலம்பியாவுக்கு திருத்தூதுப் பயணம் செப்டம்பர் 6-11


மார்ச்,11,2017. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு, இவ்வாண்டின் செப்டம்பரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம், இவ்வெள்ளி மாலையில் அறிவித்தது.

கொலம்பிய அரசுத்தலைவரும், ஆயர்களும் விடுத்த அழைப்பை ஏற்று, 2017ம் ஆண்டின் செப்டம்பர் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை, அந்நாட்டின் Bogotá, Villavicencio, Medellín Cartagena ஆகிய நான்கு நகரங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம், அறிவித்தது.

இத்திருத்தூதுப் பயண நிகழ்வுகள், விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அச்செய்தித் தொடர்பகம் கூறியது.

கொலம்பிய அரசுக்கும், அந்நாட்டின் FARC புரட்சிக் குழுவுக்கும் இடையே, ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற அமைதி உரையாடலுக்குப் பின்னர், 2016ம் ஆண்டு    ஆகஸ்டில், கியூபா நாட்டில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த உரையாடலில், வத்திக்கான் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலம்பியாவில், 1964ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற உள்நாட்டுச் சண்டையில், ஏறக்குறைய இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும், 68 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ளனர் என, Human Rights Watch அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.