2017-03-11 15:02:00

புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்பு


மார்ச்,11,2017. எருசலேமில், 11 ஆண்டுகள் சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர், இயேசுவின் திருக்கல்லறை இம்மாதத்தில் விசுவாசிகளுக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளவேளை, திருப்பயணிகள் புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது, புனித பூமி பாதுகாவலர் அவை.

புனித பூமியை, உள்ளூர் மக்களோடு இணைந்து, தனித்துவமிக்க பூமியாக மாற்றுவது திருப்பயணிகளே என்று, ஆசியச் செய்தியிடம் கூறினார், புனித பூமி பாதுகாவலர் அவையின் உறுப்பினரான, பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரர் Sinisa Srebenovic.

இயேசுவின் திருக்கல்லறையை மீண்டும் திறக்கும் நிகழ்வு, இம்மாதம் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு உட்பட பல முக்கிய கிறிஸ்தவத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இயேசுவின் திருக்கல்லறை சீரமைக்கப்பட்டு, தற்போது திறக்கப்படுவது வரலாற்றில் மூன்றாவது முறையாகவும், கடந்த இருநூறு ஆண்டுகளில் முதன் முறையாகவும் உள்ளது.  

உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டைன் அவர்களின் அன்னை ஹெலன், இயேசுவின் திருக்கல்லறைப் பகுதியைக் கண்டுபிடித்த பின்னர், கி.பி.325ம் ஆண்டில், பேரரசர் கான்ஸ்ட்டைன் திருக்கல்லறையைக் கட்டினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.