2017-03-14 15:53:00

பாலியல் அடிமை நடவடிக்கைக்கு அருள்பணியாளர் மன்னிப்பு


மார்ச்,14,2017. இரண்டாம் உலகப் போர் மற்றும், காலனி ஆதிக்கத்தின்போது, ஜப்பானியப் படைவீரர்களின் பாலியல் நடவடிக்கைகளுக்கு, தென் கொரியப் பெண்கள் பயன்படுத்தப்பட்டதற்கு, ஜப்பான் பெயரில் மன்னிப்புக் கேட்டுள்ளார் ஜப்பானிய இயேசு சபை அருள்பணியாளர் ஒருவர்.

தென் கொரியாவில், ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் போது, பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பெண்களுக்கு நீதி கேட்டு, செயோல் நகரிலுள்ள ஜப்பான் தூதரகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட நிகழ்வில், திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய இயேசு சபை அருள்பணியாளர் Jun Nakai அவர்கள், இவ்வாறு கூறினார்.

இரண்டாம் உலகப் போர் மற்றும், காலனி ஆதிக்கத்தின்போது, ஜப்பானியர்களால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் குறித்து, ஜப்பானியர்களிடம் எடுத்துக்கூற இருப்பதாகவும்,  மக்கள் மத்தியில் புதியதொரு வருங்காலத்தை உருவாக்கவிருப்பதாகவும் கூறினார்,  அருள்பணி Jun Nakai.

ஜப்பானியப் படைவீரர்களால், பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பெண்களுக்கு மறுவாழ்வு இல்லம் அமைப்பதற்கென, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், 2015ம் ஆண்டு டிசம்பரில் இசைவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.