2017-03-14 15:03:00

மனமாற்றம் : தீமையைத் தவிர்த்து நன்மை செய்யக் கற்றுக்கொள்வது


மார்ச்,14,2017. தீமையைத் தவிர்த்தல், நன்மை செய்யக் கற்றுக்கொள்ளல், ஆண்டவரால் வழிநடத்தப்பட கையளித்தல் ஆகிய மூன்று செயல்களே, தவக்காலத்தில் மனமாற்றத்திற்கு நம்மை இட்டுச்செல்லும் பாதையாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை திருப்பலியில் கூறினார்.

மனமாற்றம் என்பது, வார்த்தைகளால் அல்ல, மாறாக, செயல்களால் நன்மை செய்யக் கற்றுக்கொள்வதாகும் என, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாளைய திருப்பலியின் வாசகங்களை, தனது மறையுரைக்குச் சிந்தனையாக எடுத்துக்கொண்ட திருத்தந்தை, தீமை செய்தலை விட்டொழியுங்கள், நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் என்று, முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா கூறியிருப்பதை, தவக்கால மனமாற்றத்தின் ஆரம்பமாகச் .சுட்டிக்காட்டினார்.

நன்மை செய்வது எளிதானதல்ல, எனவே அதனை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நம் ஆண்டவர் கற்றுக்கொடுப்பதை, சிறார் போன்று, நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கிறிஸ்தவ வாழ்வுப் பாதையில், ஒவ்வொரு நாளும், நாம் கற்றுக்கொள்கிறோம் என்றும், மறையுரையில் கூறினார், திருத்தந்தை.

தீமையைத் தவிர்த்து, நன்மை செய்யக் கற்றுக்கொள்வதற்கு நாம் தவக்காலத்தில் அழைக்கப்படுகிறோம், இவ்வாறு செய்யும்பொழுது, நம் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்றும், மறையுரையின் இறுதியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.