2017-03-15 15:22:00

பிறரன்பின் பன்னாட்டு கழகத்திற்கு திருத்தந்தையின் செய்தி


மார்ச்,15,2017. துன்புறும் கிறிஸ்துவின் உடலில் இணைந்த அங்கங்களாக வறியோரைக் கண்டவர், புனித வின்சென்ட் தே பால் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வின்சென்ட் தே பால் நிறுவிய ஒரு பிறரன்பு அமைப்பிற்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வறியோருக்கு பணிகள் ஆற்றும் நோக்கத்தில், புனித வின்சென்ட் தே பால், பிரான்ஸ் நாட்டின் Châtillon எனுமிடத்தில் உருவாக்கிய ஒரு பிறரன்பு அமைப்பு, தன் 400ம் ஆண்டை சிறப்பிக்கும் இவ்வேளையில், அவ்வமைப்பைச் சார்ந்தவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.

வறியோரைப் பராமரிக்கும் பணியை, புனித வின்சென்ட் தே பால், பொது நிலையினரிடம், குறிப்பாக, பெண்களிடம் ஒப்படைத்தார் என்பதை தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளத் திருத்தந்தை, இந்த பிறரன்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள், வறியோருக்கு, பொருளாதார உதவிகள் செய்வதோடு நிறுத்திவிடாமல், நன்னெறி, மற்றும், ஆன்மீக வழிகளிலும் உதவிகள் செய்வதை தான் பாராட்டுவதாகக் கூறியுள்ளார்.

பிறரன்பு அமைப்புக்கள் அனைத்தும், இன்னும் சொல்லப்போனால், திருஅவை முழுவதும், இரக்கத்தில் தோய்ந்த செயல்களை மேற்கொள்வதன் வழியாக மட்டுமே, தங்கள் நம்பகத்தன்மையை இவ்வுலகில் நிலைநாட்ட முடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

பிறரன்பின் பன்னாட்டு கழகம் (International Association of Charity) என்றழைக்கப்படும் இவ்வமைப்பைச் சார்ந்தவர்கள், "நம் பொதுவான இல்லத்தின் எதிர்காலம் நோக்கி, புனித வின்சென்ட் உடன் 400 ஆண்டுகள்" என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கும் இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் சார்பில், வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.