2017-03-16 16:09:00

சிரியா போர், அப்பாவி மக்களைக் கொல்லும் சுனாமி


மார்ச்,16,2017. போரின் கொடுமைகளை ஆறு ஆண்டுகளாக அனுபவித்துவரும் சிரியா நாட்டின் நிலைமை குறித்து, ஜெனீவாவிலும், அஸ்தானாவிலும் நடைபெறும் கூட்டங்கள் அந்நாட்டு மக்களுக்கு பயனுள்ளவற்றைக் கொணரும் என்று தான் நம்புவதாக, சிரியா நாட்டு திருப்பீடத் தூதர், கர்தினால் மாரியோ செனாரி அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சிரியாவில் நடைபெற்றுவரும் போரை, ஆழிப்பேரலை என்ற உருவகித்து பேசிய கர்தினால் செனாரி அவர்கள், தான் சிரியாவில் கழித்த, கடந்த எட்டு ஆண்டுகளில், ஆறு ஆண்டுகள், போரின் கொடுமைகளைக் காணவேண்டியிருந்ததென்றும், இந்த வன்முறைச் சுனாமியால் அதிகம் அழிந்தது, அப்பாவி பொதுமக்கள் என்றும் குறிப்பிட்டார்.

இந்தப் போரின் அழிவுகள், இளையோர் மற்றும் குழந்தைகள் மனங்களில் மிக ஆழமாகப் பதிந்திருப்பது, தனக்கு பெரும் கவலையைத் தருகிறதென்று, கர்தினால் செனாரி அவர்கள் இப்பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஜெனீவாவில் உரையாற்றிய திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் Ivan Jurkovič அவர்கள், இப்போரை, மதியற்ற படுகொலை என்று குறிப்பிட்டிருப்பதை தான் முற்றிலும் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய கர்தினால் சேனாரி அவர்கள், இந்தப் பேரழிவுக்கு பன்னாட்டுச் சமுதாயமும், வெளிநாட்டு அரசுகளும் பெரும் பொறுப்பேற்கவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

17,000 குழந்தைகள் உட்பட, 96,000 பேர் இந்தப் போரினால் உயிரிழந்துள்ளனர் என்றும், போருக்கு முன், 2 கோடியே 30 இலட்சமாக இருந்த மக்கள் தொகை, இன்று, 66 இலட்சமாகக் குறைந்துள்ளது என்றும், ஐ.நா. வெளியிட்டிருக்கும் அறிக்கை, நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது என்று, கர்தினால் செனாரி அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.