2017-03-16 13:39:00

தவக்காலச் சிந்தனை : நமது கடமைகளை ஆற்றுவோம்


நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சில கடமைகள் இருக்கின்றன. இதனை இரண்டு விதமாக பார்க்கலாம். குடும்பக் கடமைகள் மற்றும் சமுதாயக் கடமைகள். நம்மில் ஒரு சிலர், பல நேரங்களில், நமது குடும்பக் கடமைகளைக்கூட நிறைவேற்றாமல் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றோம். நம்மை பெற்று, வளர்த்த தாயையும், தந்தையையும், அவர்களின் முதிர்வயதில், பேணி பராமரிக்க தயங்கி, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுகின்றோமே, எதற்காக? நாம் பிறந்தவுடனே, நம்மை, ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்காமல், தங்களை உருக்கி நமக்கு உருவம் கொடுத்த அந்த ஒரே காரணத்திற்காகவா? நமது சகோதர, சகோதரிகள் தேவையில் இருக்கும்பொழுது, அவர்களுக்கு உதவ முன்வர மறுக்கின்றோமே, எதற்காக? சிறுவயதில் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு உதவிகள் செய்து, உறுதுணையாக இருந்து, நம்மை அரவணைத்ததற்காகவா? என் பெற்றோர்க்கு நான் மட்டுமா மகன்? என் சகோதரிக்கு நான் மட்டுமா சகோதரன்? மற்ற பிள்ளைகளும், உடன்பிறப்புக்களும் இருக்கின்றார்கள் அல்லவா? என்று நம்மில் எத்தனை பேர் கேட்கின்றோம்? இத்தகைய எண்ணம் நமது சுயநலத்திற்கு தீனியிட்டு, நமது உறவுகளில் விரிசலை ஏற்படுத்தி, நம்மைத்  தனிமைப்படுத்துகின்றது. அதனைத் தவிர்த்து, நானும் மகன்தானே, நானும் சகோதரன்தானே என்று எண்ணிப்பாருங்கள்... நமது உறவுகள் வளரும். ஆம், நம்மோடு இருக்கின்ற நம் பெற்றோர், சகோதர, சகோதரிகளை ஏற்றுக்கொண்டு நாம் ஆற்றவேண்டிய கடமைகளை செய்யாமல் இத்தவக்காலத்தில் வேறு எங்கு இறைவனைத் தேடமுடியும்? (அ.சகோ.செலூக்காஸ் சே.ச.)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.