2017-03-16 16:20:00

மனித வர்த்தக ஆற்றின் கிளை நதி, கடுமையான வறுமை


மார்ச்,16,2017. மனித வர்த்தகத்திற்கு எதிராகப் போராடுவது, தன் தலைமைப்பணியின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணர்த்தி வருவதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. தலைமையகத்தில் ஆற்றிய உரையில் கூறினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், “போர்ச் சூழல்களில் மனித வர்த்தகம்: அடிமைத்தனம், கட்டாயப் பணிகள்” என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில், இப்புதனன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், இவ்வாறு கூறினார்.

வெள்ளமெனப் பெருகியோடும் மனித வர்த்தகம் என்ற ஆற்றில் கடுமையான வறுமை, சமுதாய பாகுபாடுகள், அடிப்படை தேவைகள் நிறைவேறாத நிலை போன்ற கிளை நதிகள் கலக்கின்றன என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பொதுவாக, மனித வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மனசாட்சியற்ற முறையில் நடந்துகொள்கின்றனர் என்றும், போர் நிலவும் சூழல்களில், இவர்களிடம் மனிதாபிமானம் முற்றிலும் அழிந்துபோகிறது என்றும், பேராயர் அவுசா அவர்கள் கவலை வெளியிட்டார்.

போர்ச்சூழல்களில், கிறிஸ்தவர்களும், சிறுபான்மை சமுதாயங்களும் அனுபவிக்கும் கொடுமைகள், திருப்பீடத்திற்கு ஆழ்ந்த கவலையை உருவாக்கியுள்ளது என்று, பேராயர் அவுசா அவர்கள் ஐ.நா. அவை கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.