2017-03-17 15:32:00

பணியிடங்களில் பெண்களின் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும்


மார்ச்,17,2017. சிறந்த வருங்காலத்தை அமைப்பதற்கு, ஆண்கள் மற்றும், பெண்களுக்கிடையே முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்று, திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில், பெண்கள் பற்றி ஆற்றிய உரையில் கூறினார்.

“மாறிவரும் தொழில் உலகில், பொருளாதாரத்தில் பெண்களின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் 61வது அமர்வில், இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

வாழ்வு மற்றும் தொழிலின் ஒவ்வொரு பகுதியிலும், பெண்களின் திறமைகளை உணர்ந்து, அவர்களுக்கு அதிகாரமளிப்பது, பெண்களை மட்டுமல்ல, நம் அனைவரையும் உறுதிப்படுத்துவதாக அமையும் என்றும் தன் உரையில் கூறினார், பேராயர் அவுசா.

பணியிடங்களில் பெண்களின் மாண்பு உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என, உலகளாவிய சமுதாயத்தைக் கேட்டுக்கொண்ட பேராயர் அவுசா அவர்கள், போர் மற்றும், வறுமையினால் நாடுகளைவிட்டு வெளியேறும் பெண்களும், சிறுமிகளும், எதிர்கொள்ளும் இன்னல்களை, சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

மனித வர்த்தகம் மற்றும் தவறாக நடத்தப்படுவதால், பெண்களும், சிறுமிகளும் கடும் உரிமை மீறல்களைச் சந்திக்கின்றனர் என்ற கவலையையும் வெளிப்படுத்தினார், பேராயர் அவுசா.

ஊதியமில்லாமல் பெண்கள் ஆற்றும் வேலைகள், பொருளாதாரத் துறைகளால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை எனினும், பெண்களின் இவ்வேலைகள், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஒரு சமூகத்தையும், ஒரு நாட்டையும் தாங்கிப் பிடிக்கும் அடிப்படைத் தூண்களாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார், பேராயர் அவுசா.

நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில், இம்மாதம் 13ம் தேதி தொடங்கிய இக்கூட்டம், இம்மாதம் 24ம் தேதி நிறைவடைகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.