2017-03-18 14:12:00

தவக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


பெரு நாட்டில், சகதி வெள்ளத்திலிருந்து வெளியேறிய பெண் (Woman escapes raging mudslide in Peru)... கடந்த வியாழன், வெள்ளி – மார்ச் 16,17 - ஆகிய இரு நாள்கள், ஊடகங்களிலும், சமுதாய வலைத்தளங்களிலும் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு செய்தியின் தலைப்பு இது. தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், தண்ணீரும், சகதியும் இணைந்து வெள்ளமெனப் பாய்ந்து செல்கின்றன. இந்தச் சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட, Evangelina Chamorro Diaz என்ற இளம்பெண், கையில் அகப்பட்ட மரக்கிளை ஒன்றை இறுகப்பற்றி, சகதியிலிருந்து வெளியேறி வந்தார்.

இழுத்துச் செல்லும் சகதியின் சக்திக்கு, தன்னைக் கையளித்துவிடாமல், எதிர் நீச்சலடித்து, போராடி, கரைசேர்ந்த, 32 வயது நிறைந்த Evangelina அவர்கள், இன்றைய ஞாயிறு சிந்தனைக்கு அடித்தளமிடுகிறார்.

இவ்விளம்பெண்ணின் பெயர், முதலில், நம் கவனத்தை ஈர்க்கிறது. Evangelina என்ற பெயரின் பொருள், 'நற்செய்தி'. சகதியிலிருந்து மீண்டெழுந்த இவ்விளம்பெண், இன்னும் பல ஆண்டுகள், ஒரு நற்செய்தியாக வாழ்வார் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். சகதியிலிருந்து வெளியேறி, நற்செய்தியாக வாழும் Evangelina அவர்கள், இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் சமாரியப் பெண்ணை நினைவுக்குக் கொணர்கிறார்.

இயேசுவின் காலத்தில், ஆணாதிக்கச் சமுதாயத்தில், ஒரு பெண்ணாக, சமாரியப் பெண்ணாக வாழ்வதென்பது, கடுமையான எதிர் நீச்சல்தான். அதிலும், இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பெண், ஐந்து ஆண்களுடன் வாழ்ந்தபிறகு, ஆறாவது மனிதரோடு வாழ்பவர். மதம், நன்னெறி, ஊர் கட்டுப்பாடு என்ற பல அளவுகோல்களால் நசுக்கப்பட்ட, இப்பெண் மீது, கண்டனச் சேறு எப்போதும் வீசப்பட்டிருக்கவேண்டும்.

இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகளில், "அப்போது ஏறக்குறைய நண்பகல்" (யோவான் 4:6) என்ற குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப்பெண், தன் சொந்த ஊரிலேயே, எவ்வளவு தூரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்பதை, நற்செய்தியாளர் யோவான் இந்த சிறு குறிப்பின் வழியே உணர்த்துவதாக, ஒருசில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.

எந்த ஊரிலும், பெண்கள், காலையில், சிறு, சிறு குழுக்களாக, பல கதைகள் பேசியபடி கிணற்றிற்குச் சென்று, நீர் எடுத்து வருவது வழக்கம். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் இப்பெண்ணோ, நண்பகலில் நீர் எடுக்கச் செல்கிறார். காரணம் என்ன? அவரும், மற்றவர்களோடு காலை நேரத்தில் நீர் எடுக்கச் சென்றிருப்பார். ஆனால், அவ்வேளையில், மற்ற பெண்கள், அவரைப்பற்றி ஏளனமாகப் பேசி, கண்டனத் தீர்ப்புக்கள் வழங்கியிருப்பர். நடத்தை சரியில்லாத அவர், அந்தக் கிணற்றில் நீர் எடுப்பதால், கிணற்று நீரே தீட்டுப்பட்டுவிட்டதாக அப்பெண்ணுக்கு உணர்த்தியிருப்பர். ஏனைய பெண்கள் விடுத்த கண்டனக் கணைகளால் காயப்படவேண்டாம் என்ற நோக்கத்தில், அவர், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத நண்பகல் வேளையைத் தேர்ந்தெடுத்திருப்பார்.

தான் வாழும் சமுதாயம், தன்மீது வாரியிறைத்த சேற்றையும், சகதியையும் கழுவ முடியாமல் வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணை, அச்சகதியிலிருந்து மீட்டு, நற்செய்தியை அறிவிப்பவராக மாற்றுகிறார், இயேசு. இந்த அற்புதத்தை, இன்றைய நற்செய்தியாக நாம் பகிர்ந்துகொள்கிறோம்.

உயிர்ப்புத் திருவிழாவை நோக்கி, நாம் தவக்காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இந்த உயிர்ப்புப் பெருவிழாவுடன் தொடர்புடைய மூன்று அடையாளங்கள் - தண்ணீர், ஒளி, வாழ்வு. இந்த ஞாயிறன்றும், இதைத் தொடரும் இரு ஞாயிறுகளிலும், இம்மூன்று அடையாளங்களை வலியுறுத்தும் நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இயேசு, சமாரியப் பெண்ணைச் சந்திப்பதும், தண்ணீர் குறித்து பேசுவதும், இந்த வாரம் தரப்பட்டுள்ள நிகழ்ச்சி (யோவான் 4: 5-42). பார்வை இழந்த ஒருவருக்கு, இயேசு, பார்வை வழங்குவதும், ஒளியைக் குறித்துப் பேசுவதும், அடுத்த வாரம் நாம் வாசிக்கும் நற்செய்தி (யோவான் 9: 1-41). இறந்த இலாசரை உயிர்ப்பித்து, வாழ்வைப் பற்றி இயேசு பேசுவது, மூன்றாம் வாரம் தரப்பட்டுள்ள நற்செய்தி (யோவான் 11: 1-45).

மேலும், தவக்காலத்தின் உயிர் நாடியான மாற்றம் என்ற கருத்து, இந்த மூன்று நிகழ்வுகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமாரியப் பெண்ணின் நெறி பிறழ்ந்த வாழ்விலும், அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையிலும் மாற்றம் நிகழ்கின்றது. பார்வை இழந்தவர், தன்னை குணமாக்கியவர் யார் என்பதை அறியாமலேயே அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவரை, பரிசேயர்களுக்கு முன் உயர்த்திப் பேசுகிறார். பின்னர், இயேசுவைச் சந்தித்ததும், முழு நம்பிக்கையுடன் அவரிடம் சரணடைகிறார். மூன்றாவது நிகழ்வில், உயிரிழந்து, புதைக்கப்பட்ட இலாசர், மீண்டும் உயிர் பெற்றெழும் உன்னத மாற்றம் நிகழ்கிறது.

சமாரியப் பெண்ணிடம் மாற்றங்களை உருவாக்க, இயேசு தேர்ந்தெடுத்த பள்ளிக்கூடம்... ஒரு கிணற்றடி. அதுவும், யூதர்களின் வெறுப்புக்கும், ஏளனத்திற்கும் உள்ளான சமாரியர் வாழ்ந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்றடி. பல நூறு ஆண்டுகள், பகைமை, பிரிவு, பிளவு ஆகிய உணர்வுகளில் ஊறிப்போயிருந்த யூதர், சமாரியர் என்ற இரு குலத்தவரின் பிரதிநிதிகளாக, இயேசுவும், சமாரியப் பெண்ணும், கிணற்றடியில் சந்திக்கின்றனர்.

இயேசு அந்தச் சமாரியப் பெண்ணிடம் வலியச்சென்று "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" (யோவான் 4:8) என்று கேட்கிறார். வெகு எளிதாக, மேலோட்டமாக ஆரம்பமான இந்த உரையாடல், வெகு ஆழமான உண்மைகளைத் தொடுகின்றது. இந்த உரையாடலின் முடிவில், ஊரால் ஒதுக்கப்பட்டிருந்த ஒரு பெண், அந்த ஊரையே இயேசுவின் பாதம் கொண்டு வந்து சேர்த்த பெருமையைப் பெறுகிறார். இறைவனைப்பற்றிப் பேச, யாருக்கு, சிறிதும் தகுதியில்லை என்று உலகம் ஒதுக்கிவைத்ததோ, அவர்களே, இயேசுவை உலகறியச் செய்த தலைசிறந்த சாட்சிகள் ஆயினர் என்பதை, விவிலியமும், திருஅவை வரலாறும், மீண்டும், மீண்டும் கூறியுள்ளன.

இந்த நற்செய்திப் பகுதி, இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் குறித்து சிந்திக்க அழைக்கிறது. கிணற்று மேட்டில் நடக்கும் ஓர் உரையாடல் இது. கிணற்று மேடு, டீக்கடை, ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தடி என்று, வெகு சாதாரண, வெகு எளிய இடங்களில், சமுதாயம், அரசியல், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் அலசப்படுவது, நமக்கெல்லாம் தெரிந்ததுதான். மிகச் சாதாரணமான இவ்விடங்களில் இறைவனைப் பற்றியப் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்பதை, கிணற்று மேட்டில் நடக்கும் உரையாடல் வழியே, இயேசு, இன்று நமக்கு உணர்த்துகிறார்.

அடுத்ததாக, தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும், சமுதாயப் பிரிவுகள் குறுக்கிடுவதை, இந்த உரையாடல் தெளிவாக்குகிறது. தண்ணீரைப்பற்றி பேசும்போது, நெருடலான பல எண்ணங்கள் மனதில் அலைமோதுகின்றன. ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 22ம் தேதியை, உலகத் தண்ணீர் நாள் என்று சிறப்பிக்கிறது. வருகிற புதனன்று சிறப்பிக்கப்படும் உலக தண்ணீர் நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மக்களுக்கு வழங்கும் செய்தி, நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. திருத்தந்தையுடன் இணைந்து, இன்னும் பல உலகத் தலைவர்கள், ஊடகங்கள் வழியே, நேரடியாகப் பேசவிருக்கின்றனர்.

கடந்த மாதம், திருத்தந்தை, தண்ணீரைக் குறித்து, ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றினார். "தண்ணீர் பெறும் மனித உரிமை" என்ற தலைப்பில், பிப்ரவரி 23, 24ம் தேதிகளில், வத்திக்கானில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் திருத்தந்தை பேசும்போது, தான் தயாரித்திருந்த உரையை வாசிப்பதை நிறுத்திவிட்டு, தன் உள்ளத்தில் இருந்த ஒரு வேதனையைப் பகிர்ந்துகொண்டார். "சிறு, சிறு துண்டுகளாக, தற்போது உலகில் நிகழ்ந்துவரும் மூன்றாம் உலகப் போரைத் தாண்டி, தண்ணீருக்காக நாம் ஒரு பெரும் உலகப் போரை நோக்கிச் செல்லவில்லையா என்பதை ஆய்வு செய்யவேண்டும்" என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, "சுத்தமானத் தண்ணீர் கிடைக்காத காரணத்தால், ஒவ்வொரு நாளும், 1000த்திற்கும் அதிகமான குழந்தைகள் இறக்கின்றனர் என்பதை அறிந்தும், நாம், அக்கறையற்றிருப்பது தவறு" என்று கூறினார்.

இறைவன் தந்த அற்புதக் கொடைகளில் ஒன்றான தண்ணீரை, பல வழிகளில் நாம் சீரழித்துள்ளோம். தண்ணீர் தொடர்பாக மனித சமுதாயம் இழைத்துள்ள பல குற்றங்களில், சமுதாயத்தைப் பிரிக்கும் ஓர் ஆயுதமாக தண்ணீரை நாம் மாற்றியுள்ளோம் என்பதே, நமது பெரும் குற்றம். சாதிக்கொரு கிணறு, குளம் என்று நாம் உருவாக்கிய அவலம் இன்றும் பல இடங்களில் தொடர்கின்றது.

தண்ணீரை மையப்படுத்தி வேறு வகையான பிரிவுகள் இன்று உருவாகியுள்ளன. தண்ணீர், ஒரு பொருளாதார முதலீடு என்பதை உணர்ந்துள்ள பல செல்வர்கள், தண்ணீரைத் தனியுடைமையாக்கி வரும் கொடூரம் பெருகிவருகிறது. தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்த நம் பண்பாடு குறைந்து, மறைந்து, தண்ணீரைக் காசாக்கும் வியாபாரம் வளர்ந்து வருகிறது. இந்த வியாபாரத்தால், தண்ணீர், 'நீலத் தங்கமாய்' (Blue Gold) மாறி வருகிறது.

தண்ணீரை ஒரு பிரிவினை ஆயுதமாகப் பயன்படுத்துவோருக்கும், தனியுடமைத் தங்கமாகப் பாவிக்கும் சுயநலச் செல்வந்தர்களுக்கும், சமாரியக் கிணற்றடியில் நடத்திய ஒரு பாடத்தின் வழியாக, இயேசு சாட்டையடி வழங்குகிறார்.

இறைவனின் கொடையான தண்ணீரை, சாதி, இனம், பொருளாதாரம் என்ற கூறுகளில் பிரித்துள்ளது போதாதென்று, இறைவனையும், பல காரணங்களுக்காக, பிரித்து, கூறுபோடும் மடமை முயற்சிகளில் மனித சமுதாயம் ஈடுபட்டுள்ளது என்பதையும், இயேசு, இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இறைவனைத் தொழுவதற்கு, மலைகளையும், எருசலேம் புனித நகரையும், தேடாதீர்கள் என்று கூறும் இயேசு, தொடர்ந்து அப்பெண்ணிடம் கூறும் அழகிய எண்ணங்களை இன்றைய நற்செய்தியிலிருந்து கேட்போம்:

யோவான் நற்செய்தி 4 : 21, 23-24

இயேசு சமாரியப் பெண்ணிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்... உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” என்றார்.

இறைவனைச் சிறைப்படுத்தும் இலக்கணங்கள் அனைத்தும் இன்றைய நற்செய்தியில் அழிக்கப்படுகின்றன. அதேபோல், மனிதர்கள்மீது நாம் சுமத்தும் பாகுபாடுகள், முத்திரைகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன. மனிதர்கள் வகுத்த வரம்புகளைத் தாண்டிய, உண்மை இறைவனை உள்ளத்தில் கண்டு, அவரை உள்ளத்தில் வழிபடுவதற்கு இந்தத் தவக்காலம் நமக்கு உதவட்டும். அதேபோல், தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும் பிளவுகளை வளர்த்துவரும் நம் சமுதாயம், பாகுபாடுகளைத் தாண்டி, உயிருள்ள ஊற்றான இறைவனைப் பருகவும், இந்த தவக்காலம் நமக்கு உதவுவதாக.

சமுதாயம் உருவாக்கியுள்ள பெண்ணடிமைத்தனம் என்ற சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பெண்கள், இறை நம்பிக்கை என்ற கிளைகளைப் பற்றி, இந்த சகதி வெள்ளத்திலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான துணிவைப் பெறவேண்டும் என்று மன்றாடுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.