2017-03-18 15:05:00

திருத்தந்தைக்கு, கவுரவ மருத்துவப் பட்டம்


மார்ச்,18,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஆன்மாக்களின் மருத்துவராக அங்கீகரித்து, அவருக்கு, கவுரவ மருத்துவப் பட்டம் வழங்குவதாக, இத்தாலியின் சலேர்னோ மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இத்தாலிய கத்தோலிக்க மருத்துவர் கழகமும், சலேர்னோ பல்கலைக்கழகத்தின் மருந்து மற்றும், அறுவைச் சிகிச்சைத் துறையும் சேர்ந்து, Baronissiல் ஏற்பாடு செய்த கூட்டத்தில், சலேர்னோ பல்கலைக்கழகத்தின் தலைவர், Aurelio Tommasetti தலைமையிலான குழு, திருத்தந்தைக்கு, கவுரவ மருத்துவப் பட்டம் வழங்குவதாக, இவ்வெள்ளியன்று அறிவித்தது.

உலகின் மிகப் பழமையான மருத்துவப் பள்ளியான சலேர்னோ மருத்துவப் பள்ளி, தற்போது, மருந்து மற்றும், அறுவைச் சிகிச்சைத் துறையாகச் செயல்பட்டு வருகிறது.

ஆன்மாக்களின் மருத்துவராகவும், நலிந்தவர்கள், மிக ஏழைகள், இறை இரக்கமும், மனித ஒருமைப்பாடும் அதிகம் தேவைப்படுகின்றவர்கள் ஆகியோரை நன்கு அறிந்தவராகவும் செயல்படுகின்ற, திருத்தந்தையின் திறமைகள், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று, சலேர்னோ மருத்துவப் பல்கலைக்கழகம், திருத்தந்தைக்கும், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.