2017-03-18 15:10:00

புனித பூமி திருஅவைக்கு புனித வெள்ளி உண்டியல் நிதி


மார்ச்,18,2017. புனித பூமியிலுள்ள திருஅவைக்கு கத்தோலிக்கர் உதவுமாறு, உலகின் ஆயர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார், திருப்பீட கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி.

இவ்வாண்டின் தவக்காலத்தின் தொடக்கத்தில், இக்கடிதத்தை எழுதியுள்ள கர்தினால் சாந்திரி அவர்கள், புனித பூமியில், திருஅவையின் பிரசன்னம் மட்டுமல்ல, அப்பகுதியின் புனித இடங்களும், திருத்தலங்களும் காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை திருத்தந்தை வலியுறுத்தி இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில், குறிப்பாக, ஈராக், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளில்  கிறிஸ்தவர்களின் வாழ்வு, மிகவும் கடினமாக உள்ளது எனவும், இவ்விடங்களில் எல்லாக் கிறிஸ்தவ சபையினரும் இரத்தம் சிந்துகின்றனர் எனவும் கூறியுள்ளார், கர்தினால் சாந்திரி.

புனித வெள்ளியன்று ஆலயங்களில் எடுக்கப்படும் உண்டியல், புனித பூமி திருஅவைக்கு வழங்கப்படும் என, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் அறிவித்த திட்டம், தொடர்ந்து செயலில் உள்ளது, அது இவ்வாண்டும் புதுப்பிக்கப்படுகின்றது எனவும் கர்தினால் சாந்திரி அவர்கள், குறிப்பிட்டுள்ளார்.

புனித பூமிக்கு விசுவாசிகள் திருப்பயணம் மேற்கொள்வது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கு உதவுவதாய் இருக்குமெனவும், எருசலேம் மற்றும் பெத்லகேமில் வாழும் மக்களில் குறைந்தது 30 விழுக்காட்டினர், திருப்பயணங்களால் வாழ்கின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது எனவும், கர்தினால் சாந்திரி அவர்களின் கடிதம் குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.