2017-03-20 15:56:00

கனவு காணும் வல்லமை கொண்ட, இயலாமைகளின் பாதுகாவலர்


மார்ச்,20,2017. கனவு காண்பதற்குரிய வல்லமையைக் கொண்டிருக்கவும், அந்த கனவில் தோன்றும் நல்லவற்றை நிறைவேற்றுவதற்குரிய மனத்திறனைக் கொண்டிருக்கவும், எடுத்துக்காட்டாக புனித யோசேப்பு திகழ்கிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தவக்காலத்தில் புனித யோசேப்பின் திருவிழா ஞாயிறன்று வந்ததால், அது மாற்றப்பட்டு, இத்திங்களன்று திருஅவையில் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி, புனித யோசேப்பு குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு கனவில் தோன்றிய வானதூதர் உரைத்தவற்றை ஏற்று, அடிபணிந்து, அன்னை மரியாவை ஏற்றுக்கொண்ட அவரின் உறுதியைக் குறித்து தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

கடவுள் விரும்புவது நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தில், இறைவனின் வாக்குறுதியை அமைதியுடன் எடுத்துச் சென்றவர் புனித யோசேப்பு எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பல்வேறு இயலாமை நிலைமைகளிலும், எவ்வித வார்த்தையும் பேசாமல், இறைவனுக்குப் பணிந்து நடந்த புனித யோசேப்பை, இயலாமைகளின் பாதுகாவலர் எனவும் அழைக்கலாம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியானவராகவும், தொழிலாளராகவும், இயலாமை நிலைகளையும் துணிவுடன் ஏற்றுச் செயல்படுபவராகவும், கனவுக் காணக்கூடியவராகவும் இருக்கும் புனித யோசேப்பு அவர்கள், அனைவருக்கும் நல்லச் செய்தியைத் தருபவராகவும் உள்ளார் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.