2017-03-20 16:22:00

வாழ்வின் ஊற்றைப் பெற்றுள்ள நாம், தாகத்துடன் அலைகிறோம்


மார்ச்,20,2017. திருமுழுக்கின்போது நம் இதயங்களில் ஊற்றப்பட்ட, முடிவற்ற  வாழ்வின்  தண்ணீரை மறந்துவிட்டு, தாகம் தீர்க்கும் கிணறுகளைத் தேடி நாம் அலைந்து கொண்டிருக்கிறோம் என இஞ்ஞாயிறு மூவேளை செபஉரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிணற்றில் தண்ணீர் எடுக்கவந்த சமாரியப்பெண்ணை  இயேசு சந்தித்து உரையாடியது குறித்து எடுத்துரைக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றிய தன் கருத்துக்களை,  மூவேளை செபவுரையின்போது எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமாரியப் பெண்ணைப்போல் நாமும் இயேசுவுடன் உரையாடி, அவரே நம் மீட்பர் என்பதை கண்டுகொள்வோம் என்றார்.

இயேசுவுடன் தனிப்பட்ட விதத்தில் உரையாடல் கொள்ளவும், செபத்தின் வழியாக மனமாற்றம் பெறவும், துன்புறும் சகோதர சகோதரிகளில் அவர் முகத்தைக் காணவும், இத்தவக்காலம் உகந்த நேரம் எனவும் கூறினார் திருத்தந்தை.

இத்தவக்காலத்தில், இத்தகைய வழிகளில் நாம் செயல்படுவதன் வழியாக, நம் திருமுழுக்கின் அருளை புதுப்பிப்பதோடு, இறைவார்த்தை வழியாக நம் தாகத்தைத் தணிக்கவும் இயலும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.