சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ இந்தியா, இலங்கை

100% தலித் கிறிஸ்தவர்களுடன் இணைந்துள்ள இந்திய திரு அவை

இந்தியப் பழங்குடியின மக்களுடன் கர்தினால் கிரேசியஸ் - RV

21/03/2017 15:58

மார்ச்,21,2017. இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை, நூறு விழுக்காடு, தலித் கிறிஸ்தவர்களுடன் இருப்பதாக, மும்பையில் இடம்பெற்ற தேசிய தலித் கிறிஸ்தவ அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த 45 தலைவர்களின் முன்னிலையில் உரையாற்றிய மும்பை கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தியக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 90 இலட்சமாக இருக்கும் நிலையில், தலித் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது இலட்சம் என்பதை நினைவில் கொண்டு, அவர்களின் மத உரிமைகள் மதிக்கப்படுவதுடன், அவர்களின் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்குரிய அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் என்றார். 

ஏழ்மைக்கு எதிரான எந்த ஒரு திட்டமும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அதுவும், தலித் மக்களிடமிருந்து துவங்குவதாகவும் இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், கிறிஸ்தவ தலித் மக்களிடையே இறையழைத்தல்களை ஊக்குவிப்பதன் வழியாக, திருஅவைக்குள்ளும் சமூகத்திலும் மாற்றங்களைக் கொணர முடியும் என்றார்.

மாற்றங்களைக் கொணர விரும்புவோர், தங்கள் நடவடிக்கைகள் வழியாக இதனை ஆற்ற முடியும், அதாவது, தங்களுக்கு அடுத்திருப்பவர்களுக்கு உணவளித்தல், அவர்களைச் சந்தித்தல், அவர்களுக்கு கல்வி வழங்குதல் போன்றவை வழியாக, சமூக மாற்றத்திற்கு உதவ முடியும் என, மேலும் உரைத்தார் கர்தினால் கிரேசியஸ்.

இந்தியாவில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கோ, இஸ்லாம் மதத்திற்கோ மாறும் தாழ்த்தப்பட்ட சாதியினர், அந்த சமூகத்திற்குரிய சலுகைகளை இழக்க வேண்டிய கட்டாயத்திற்கு சட்டத்தின் வழியாகவே தள்ளப்படுவது குறிப்பிடத்தக்கத்து.

ஆதாரம் :  AsiaNews/வத்திக்கான் வானொலி

21/03/2017 15:58