2017-03-21 15:10:00

ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறும் இடம் சலவை இயந்திரமல்ல


மார்ச்,21,2017. மன்னிக்கப்பட்டவராகவும், மன்னிப்பவராகவும் இருப்பதைப் புரிந்து கொள்வதற்கு, செபமும், பாவத்திற்காக மனம் வருந்துதலும், பாவத்திற்காக வெட்கப்படுதலும் அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை திருப்பலியில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றியத் திருப்பலியில், இந்நாளைய வாசகங்களை மையப்படுத்தி மறையுரையாற்றியத் திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறும் இடங்களை, சலவை இயந்திரங்கள், விரைவில் பணமாற்றம் நடைபெறும் இடங்கள், பாவத்தை அகற்றிவிடும் மற்றும், போலியான மன்னிப்பைத் திருடுகின்ற இடங்கள் போன்று கருதுவது குறித்து எச்சரித்தார்.

இந்நாளைய முதல் வாசகமான, தானியேல் நூலிலிருந்து முதலில், தன் மறையுரைச் சிந்தனைகளை வழங்கியத் திருத்தந்தை, தாழ்மையுடனும், மனம் வருந்திய உள்ளத்துடனும் இறைவன்முன் நாம் வரவேண்டும் என்றார்.

அடுத்து, தனக்கு எதிராகப் பாவம் செய்யும் சகோதரரை, ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை மன்னிக்க வேண்டும் என்று, பேதுருவுக்கு இயேசு சொல்லும் நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி மறையுரையாற்றியத் திருத்தந்தை, தான் மன்னிக்கப்பட்டுள்ளேன் என்று புரிந்து கொண்டவரால் மட்டுமே, பிறரை  மன்னிக்க இயலும் எனவும் கூறினார்.

மன்னிப்பின் மறையுண்மையைப் புரிந்துகொள்ளாமை பற்றியும் விளக்கிய திருத்தந்தை, இந்த மறையுண்மை, வங்கியில் பணப்பரிமாற்றம் செய்வது போன்றது அல்ல என்றும், திருஅவை, இறை இரக்கத்தின் மாபெரும் பணியான மன்னிப்பில் நாம் வாழ உதவுகின்றது என்றும் கூறினார்.

மன்னிப்பின் மறையுண்மையைப் புரிந்துகொள்வதற்கு, முதலில், ஒருவர் தன் பாவங்கள் குறித்து வெட்கப்பட வேண்டும் என்று சொல்லி, விசுவாசிகள் தங்களின் ஒவ்வொரு நாள் வாழ்வு பற்றி சிந்திப்பதற்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்குச் செல்லும்போது, செய்த தவறுகள் குறித்து வெட்கப்பட்டுச் செல்வதில்லை, மனசாட்சியில் ஏதோ அழுக்கு இருப்பதாக நினைத்துச் செல்கின்றோம் என்று மறையுரையில் உரைத்த திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளம், துணியில் பட்ட கறையை நீக்கும் கருவி அல்ல என்றும் கூறினார்.

இறைவனின் இரக்கத்தை உணர்ந்தவர்களாய், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற வேண்டும் என்றும், ஒருவர், தான் மன்னிக்கப்பட்டுள்ளதாக உணராத நிலையில்,  அவரால் ஒருபோதுமே மன்னிக்க முடியாது என்றும், மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருவர் தன் பாவத்தை உணர்ந்து, அது குறித்து வெட்கப்பட்டு, இறைவனிடம் அதற்காக மன்னிப்பு கேட்டு, இறைத்தந்தையால் மன்னிக்கப்பட்டுள்ளேன் என்று உணரும்போது, அவரால், பிறரை மன்னிக்க முடியும் என்றும் மறையுரையில் உரைத்த திருத்தந்தை, கணக்கில்லாமல், அதாவது எழுபது தடவை ஏழுமுறை மன்னிப்பு என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் என்று கூறி மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.