2017-03-22 15:27:00

தவக்காலச் சிந்தனை - சாட்சிகளாவோம்


மார்ச்,23,2017. மறைக் கலகங்களில் நம் முன்னோர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து சாட்சிய வாழ்வு வாழ்ந்தனர். இன்று, நிலைமை வேறு. ஆனால், சாட்சிய வாய்ப்பு நமக்கு இன்றும் தரப்படுகிறது. நமது அன்றாட வாழ்வில், அந்த வாய்ப்பு நமக்கு நம் கண்முன்னே தரப்படுகின்றது. ஆனால் அதன் வடிவங்கள் வேறு. நீதி, கேள்விக்குறியாகும்போது, சமத்துவம், அமைதி குலைக்கப்படும்போது, நம் கண்முன்னே அநியாயங்கள் நமக்கு சவால் விடும்போது, நமக்கு கிறிஸ்தவர்களாக, சாட்சிய வாழ்வு வாழ அழைப்பு விடுக்கப்படுகிறது. நமது வீடுகளில், சுற்றுப்புறங்களில், வேலை செய்யும் இடங்களில், நம் உதவி பிறருக்கு தேவைப்படும் வேளைகளில், நாம் பல நேரங்களில் வாய் மூடி 'நமக்கேன் வம்பு' என்று ஊமையாகிறோம். இந்த ஊமைத்தனம்தான் சமூகத்தின் பெரிய எதிரி. எதைக்கண்டும் குரல் எழுப்பாமல் அக்கறையற்றிருப்பது, ஒரு சமூகத்தின் சாபக்கேடு. இன்றைய நற்செய்தியில், இயேசு பேயோட்டியதும், அந்த மனிதர் பேசத்தொடங்குறார். நமது மனமும், பல்வேறு கவலைகளில், நம்மை ஊமையாக்கி விடுகின்றது. என்னோடு இல்லாதவர், எனக்கு எதிரியே என்கிறார் இயேசு. நாம் அவரின் மக்கள் எனில், அவர் வழியில் நடப்பவர் எனில், நம் வாய் திறப்போம். சமூக அவலங்களுக்குக் குரல் கொடுப்போம். மக்கள் உரிமைகள் மறுக்கப்படும்போது, குரல் கொடுப்போம். இன்றைய சமூகச் சூழலில், நீதிக்காகக் குரல் கொடுப்பதும், ஒரு சாட்சிய வாழ்வே.

இன்றைய கிறிஸ்தவம் - நீதியின் சாட்சியம்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.