2017-03-23 16:05:00

கடினப்படுத்தப்பட்ட உள்ளத்தினர், கடவுள் நம்பிக்கையற்ற..


மார்ச்,23,2017. கடினப்படுத்தப்பட்ட உள்ளத்தைக் கொண்டிருந்தால், நாம் கடவுள் நம்பிக்கையற்ற கத்தோலிக்கராய் வாழ்வோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 23, இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது, "அவர்களோ செவி சாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை; பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்" என்று, இறைவாக்கினர் எரேமியா வழியே, இறைவன் கூறும் வார்த்தைகளை, திருத்தந்தை, தன் மறையுரையின் மையமாக்கினார்.

இறைவார்த்தைக்கு செவிசாய்க்க நாம் மறுக்கும்போது, ஏனைய குரல்களுக்கு செவிசாய்த்து, இறைவனை விட்டு விலகி, எதிர் திசையில் செல்கிறோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

இறைவனுக்குச் செவிசாய்க்க மறுக்கும்போது, நமது அயலவரின் குரல்களுக்கும் செவிசாய்க்க மறுக்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, நம் உள்ளத்தில் நாமே உருவாக்கிக்கொள்ளும் வெற்றிடத்தை, உலகத்தின் போலி தெய்வங்கள் ஆக்ரமித்து விடுகின்றன என்று கூறினார்.

இறை வார்த்தையைக் கேட்காமல் இருப்பதும், அயலவர் குரலைக் கேட்காதவண்ணம் உள்ளங்களை கடினப்படுத்திக் கொள்வதும், நம்மை, கடவுள் நம்பிக்கையற்ற கத்தோலிக்கராக மாற்றிவிடுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.