2017-03-23 16:20:00

திருத்தந்தையைச் சந்தித்த காமரூன் நாட்டு அரசுத்தலைவர்


மார்ச்,23,2017. ஆப்ரிக்காவின் காமரூன் நாட்டு அரசுத்தலைவர் பால் பியா (Paul Biya) அவர்களும், அவரது துணைவியார், மற்றும் ஏனைய அரசு அதிகாரிகளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மார்ச் 23, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தனர்.

ஏறத்தாழ 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், காமரூன் நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், காமரூன் நாட்டின் கல்வி, மற்றும், நலவாழ்வு ஆகிய துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை காட்டிவரும் ஆர்வம், மற்றும், ஈடுபாடு ஆகியவை குறித்தும் பேசப்பட்டதென, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் கூறியது.

அரசுத்தலைவர் பால் பியா அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் தலைவர், பேராயர் பால் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

மேலும், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்கள் ஒவ்வொருவருடனும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில், 30 நிமிட சந்திப்புக்களை மேற்கொண்டார்.

திருவழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் இராபர்ட் சாரா, திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர், கர்தினால் ஜியான்பிரங்கோ இரவாசி, புனிதர் பட்டங்கள் வழங்கும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ, மற்றும் பலசமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் ஜான்-லூயிஸ் தூரான் ஆகியோர் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.