2017-03-23 15:51:00

பாத்திமா அன்னை காட்சி கண்ட இருவர் புனிதர்களாக அறிவிப்பு


மார்ச்,23,2017. பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சியளித்ததைக் கண்ணுற்ற மூவரில், அருளாளர்களான, பிரான்செஸ்கோ மார்த்தோ, மற்றும் அவரது தங்கை, ஜெசிந்தா மார்த்தோ ஆகிய இருவரின் பரிந்துரைகளால் நிகழ்ந்துள்ள புதுமைகளை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விருவரையும் புனிதர்களாக உயர்த்தும் வழிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சியளித்ததன் 100ம் ஆண்டைச் சிறப்பிக்க, மேமாதம் 12, 13 தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அத்திருத்தலத்திற்குச் செல்லவிருக்கும் வேளையில், இவ்விருவரையும் புனிதர்கள் என அறிவித்திருப்பது, குறிப்பிடத்தக்கது.

புனிதர் பட்டங்கள் வழங்கும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள், இவ்வியாழன் காலை திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்த வேளையில், திருத்தந்தையின் ஒப்புதலைப் பெறுவதற்கென, பல்வேறு அருளாளர்கள் மற்றும் இறையடியாரைக் குறித்து திரட்டப்பட்ட தகவல்கள் அடங்கிய ஒன்பது ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

கப்பூச்சியன் துறவு சபையைச் சேர்ந்த அருளாளர், ஆஞ்செலோ அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமையையும், பிரேசில் நாட்டில் 1645ம் ஆண்டிலும் (30 பேர்), மெக்சிகோவில் 1529ம் ஆண்டிலும் (3 பேர்) மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டவர்களின் வீரத்துவ பண்புகளையும் ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, இவர்கள் அனைவரையும் புனிதர்களாக உயர்த்தும் வழிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கினார்.

புனிதர்களாக உயர்த்தப்படுவதற்கு திருத்தந்தையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள 30 பேரில், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர் மற்றும், மூன்று வளர் இளம் பருவத்தினர் அடங்குவர்.

மேலும், 1936ம் ஆண்டு, இஸ்பானிய உளநாட்டுப் போரில் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட 32 இறையடியார் உட்பட, மேலும் நான்கு இறையடியார்களை அருளாளர்களாக உயர்த்தும் வழிமுறைகளுக்கு, திருத்தந்தை இவ்வியாழனன்று ஒப்புதல் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.