2017-03-24 15:23:00

அமெரிக்க கர்தினால் கீலெர் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்


மார்ச்,24,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டின் பால்டிமோர் முன்னாள் பேராயர் கர்தினால் வில்லியம் ஹென்ரி கீலெர்(William Henry Keeler) அவர்கள், மரணமடைந்ததையொட்டி, தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பால்டிமோரின் தற்போதைய பேராயர் வில்லியம் லோரி அவர்களுக்கு, இத்தந்திச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, உலகளாவியத் திருஅவைக்கும், தலத்திருஅவைக்கும், கர்தினால் கீலெர் அவர்கள் ஆற்றியுள்ள சிறப்பான பணிகளுக்கு, நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மார்ச் 23, இவ்வியாழன் அதிகாலையில், Catonsvilleலிலுள்ள புனித மார்ட்டீன் வயதானவர் இல்லத்தில்,  தனது 86வது வயதில் மரணமடைந்தார் கர்தினால் கீலெர். இவரின் அடக்கச் சடங்கு, மார்ச் 28ம் தேதி நடைபெறும்.

2007ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற கர்தினால் கீலெர் அவர்கள், 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். 1931ம் ஆண்டில் பிறந்த இவர், 1989ம் ஆண்டில் பால்டிமோர் பேராயராகவும், 1994ம் ஆண்டில் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். 2005ம் ஆண்டில் வத்திக்கானில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவ் அவையிலும் கலந்துகொண்டார், கர்தினால் கீலெர்.

கர்தினால் கீலெர் அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 223. இவர்களில் எண்பது வயதுக்குட்பட்ட, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய கர்தினால்களின் எண்ணிக்கை 117.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.