2017-03-24 15:51:00

கொல்லப்பட்ட அ.சகோ.ராணி மேரியின் வாழ்வுமுறை ஏற்பு


மார்ச்,24,2017. இந்தியாவில், 22 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அருள்சகோதரி, இறையடியார் ராணி மேரி வட்டாலில் அவர்களை, அருளாளராக உயர்த்துவதற்கு, அவருடைய வீரத்துவமான வாழ்வு குறித்த விவரங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள் இவ்வியாழனன்று திருத்தந்தையைச் சந்தித்து, புனிதர் மற்றும், அருளாளர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, சிலரின் வாழ்வு முறைகளை பரிந்துரைத்தவேளையில், அருள்சகோதரி, இறையடியார் ராணி மேரி அவர்களை, மறைசாட்சியாக, அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி, இறையடியார் ராணி மேரி அவர்கள், 1995ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி, பேருந்தில் இன்டோர் நகருக்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, 41 வயது மதிக்கத்தக்க சமந்தார் சிங் என்பவரால், குறைந்தது ஐம்பது முறைகள் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில், இன்டோர் மறைமாவட்டத்தில், ஏழைகள் மத்தியில், அருள்சகோதரி, இறையடியார் ராணி மேரி அவர்கள் ஆற்றிவந்த பணிகளால் எரிச்சலடைந்த சில பண்ணையார்களின் தூண்டுதலால், இவர் கொலைசெய்யப்பட்டார்.

இச்சகோதரியின் குடும்பத்தினர், கொலையாளியான சமந்தார் சிங் அவர்களை மன்னித்து, அவரை அடிக்கடி சிறையில் சென்று சந்தித்துப் பேசியதன் பயனாக, தற்போது, சமந்தார் சிங் மனம் மாறி, அருள்சகோதரி இறையடியார் ராணி மேரி அவர்களின் பக்தராக மாறியுள்ளார்.

1954ம் ஆண்டு சனவரி 29ம் தேதி கேரளாவின் கொச்சி நகருக்கு அருகிலுள்ள Pulluvazhy என்ற ஊரில் பிறந்த அருள்சகோதரி ராணி மேரி அவர்கள், Kidangoorல், பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில், 1972ம் ஆண்டில் சேர்ந்து, 1974ம் ஆண்டில் முதல் வார்த்தைப்பாடு கொடுத்தார். 1975ம் ஆண்டில் வட இந்தியாவில் Bijnoreல் தனது மறைப்பணியைத் தொடங்கிய இச்சகோதரி, 1992ம் ஆண்டில், Udainagarல் பணியாற்றச் சென்றார்.

1995ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி, தனது 54வது வயதில், கொல்லப்பட்டார் அருள்சகோதரி, இறையடியார் ராணி மேரி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.