2017-03-24 15:17:00

திருத்தந்தை, பீஜி அரசுத்தலைவர் சந்திப்பு


மார்ச்,24,2017. பீஜி (Fiji) நாட்டு அரசுத்தலைவர் Jioji Konousi Konrote அவர்கள், அமைதியின் மனிதர், மக்கள் அமைதியில் வாழ்வதற்கு, இவர் அதிகம் உதவி செய்கிறார் என்று பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பீஜி அரசுத்தலைவர் Konrote அவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில், ஏறத்தாழ இருபது நிமிடங்கள் தனியே சந்தித்து உரையாடிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

இச்சந்திப்பிற்குப் பின்னர், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் காலகர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார் பீஜி அரசுத்தலைவர் Konrote.

இச்சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடச் செய்தித் தொடர்பகம், பீஜி நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், பீஜி நாட்டின் கல்வி, நலவாழ்வு உட்பட, பொது நலனைக் காப்பதில், கத்தோலிக்கத் திருஅவை காட்டிவரும் ஆர்வம், ஈடுபாடு ஆகியவை குறித்தும் பேசப்பட்டதென கூறியது.

காலநிலை மாற்றம் குறித்து, குறிப்பாக, இவ்விவகாரத்தோடு தொடர்புடைய நன்னெறிக் கூறுகள் குறித்தும், மிகவும் நலிந்த சமூகக் குழுக்களுடனும், நாடுகளுடனும் ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், இச்சந்திப்புக்களில் அக்கறையுடன் பேசப்பட்டதெனவும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

படகு வடிவ இசைக் கருவி ஒன்றை, திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார், பீஜி அரசுத்தலைவர் Konrote.

தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில், முன்னூறுக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ள பீஜி நாடு, தென்னை மரங்கள் நிறைந்த கடற்கரைகளையும், பவளப் பாறைகளையும், கரடுமுரடான நிலபரப்புகளையும் கொண்டுள்ள அழகான நாடாகும்.

மேலும், திருப்பீட ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, திருப்பீட விசுவாச கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் Gerhard Ludwig Müller, திருப்பீட கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி ஆகியோரையும், இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.