2017-03-25 15:37:00

மிலான் புனித விக்டர் சிறையில் கைதிகள் சந்திப்பு


மார்ச்,25,2017. இச்சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில், மிலான் கர்தினால் ஆஞ்சலோ ஸ்கோலா அவர்களுடன், மிலான் புனித விக்டர் சிறைச்சாலை சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். லொம்பார்தியா மாநில அதிகாரிகள் Luigi Pagano, Gloria Manzelli, சிறைச்சாலையின் ஆன்மீக அருள்பணியாளர் Marco Recalcati ஆகியோர், சிறைச்சாலையின் முகப்பில் நின்று திருத்தந்தையை வரவேற்றனர். ஆறு பகுதிகளாக, மூன்றடுக்கு கட்டடமாக அமைந்துள்ள இச்சிறைச்சாலையைப் பார்வையிட்ட திருத்தந்தை, ஏறக்குறைய எண்பது கைதிகளைத் தனித்தனியே கைகுலுக்கி வாழ்த்தினார். இச்சிறையில், பகல் 12.30 மணிக்கு, நூறு கைதிகளுடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சிறையில் தற்போது ஆண்களும், பெண்களும் என, தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தங்கள் குழந்தைகளோடு இருக்கும் அன்னையர் கைதிகளுக்கு தனி இடம் இங்கு உள்ளது.

பிற்பகல் 2.15 மணிக்கு, இச்சந்திப்பை நிறைவு செய்து, அச்சிறைச்சாலையிலிருந்து மோன்சா  பூங்காவில் திருப்பலி நிறைவேற்றுவதற்காக, காரில் சென்றார் திருத்தந்தை. பிற்பகல் 3 மணிக்குத் திருப்பலியைத் தொடங்கினார்.  கர்தினால் ஸ்கோலா அவர்கள், முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். ஏறக்குறைய பத்து இலட்சம் விசுவாசிகள் கலந்துகொண்ட இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரையாற்றினார்.

இச்சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, மிலான் Meazza-San Siro அரங்கத்தில், இளையோர், பெற்றோர், மறைக்கல்வி ஆசிரியர்கள் போன்றோர் சந்திப்பு, கேள்வி பதில் முறையில் இடம்பெறுவதுதான் இந்த ஒரு நாள் மேய்ப்புப்பணி பயணத்தின் இறுதி நிகழ்வாகும்.

ஏழைகள், புலம்பெயர்ந்தோர், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், குருத்துவ மாணவர்கள், தியாக்கோன்கள், கைதிகள், இளையோர், பெற்றோர், என எல்லா நிலையினரையும் ஒரு நாளில் சந்தித்து, அவர்களின் இறைநம்பிக்கையை ஆழப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை அடிக்கடி கேட்டுக்கொள்வதன்படி, அவரின் இத்திருப்பணிக்காகச் செபிப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.