2017-03-25 15:30:00

மிலான் பேராலயத்தில் அருள்பணியாளர்கள் துறவறத்தார் சந்திப்பு


மார்ச்,25,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிலானின் கிழக்கே அமைந்துள்ள, வெள்ளை வீடுகள் என்ற குடியிருப்புப் பகுதியில் வாழ்கின்ற வறியோரைப் பார்வையிட்டு, அம்மக்கள், வழங்கிய நன்கொடைகளை மகிழ்வோடு பெற்றுக்கொண்டு, மிலான் பேராலயத்திற்குச் சென்றார். அங்கு, அவ்வுயர்மறைமாவட்ட அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், குருத்துவ மாணவர்கள், தியாக்கோன்கள் ஆகியோரைச் சந்தித்தார். இப்பேராலயம், ஐரோப்பாவில் மிகப் புகழ்பெற்ற கட்டடங்களில் ஒன்றாகும். உலகில், Gothic கலைவண்ணத்தில் மிக அழகாக கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய பேராலயமாகவும், உலகில், இரண்டாவது பெரிய கத்தோலிக்கப் பேராலயமாகவும் இது உள்ளது. முதல் பேராலயம் கி.பி.335ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு புனித தேக்லாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் அதன் அருகில், 836ம் ஆண்டில் ஒரு பசிலிக்கா எழுப்பப்பட்டது. 1075ம் ஆண்டில் இவ்விடத்தில் பரவிய தீ, இவையிரண்டையும் அழித்தது. பின்னர், 1386ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள், நெப்போலியன் போனபார்த்தே ஆணையிட்டதன் பேரில், 19ம் நூற்றாண்டில் முடிக்கப்பட்டன. 4ம் நூற்றாண்டில், மிலான் ஆயராகப் பணியாற்றிய புனித அம்புரோஸ், தனது மாணவரான புனித அகுஸ்தீனாருக்கு இப்பேராலயத்தில், திருமுழுக்கு அளித்ததற்குச் சான்றுகளும் உள்ளன. இச்சனிக்கிழமை காலை பத்து மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் இப்பேராலயத்தில் சிறிது நேரம் அமைதியாகச் செபித்தார். அதன்பின்னர், முதலில் மிலான் பேராயர் கர்தினால் ஆஞ்செலோ ஸ்கோலா அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.  

இப்பேராலயம், மிலான் மக்கள் அனைவருக்கும் மற்றும், மிலான் தலத்திருஅவை வாழ்விற்கும் இதயமாகவும், புனிதர்கள் அம்புரோஸ், சார்லஸ் ஆகியோரின் ஆலயமாகவும் விளங்குகின்றது. இக்காலத்திய நம் சகோதர, சகோதரிகள் இரக்கமுள்ளவர்களாக வாழவும், அதன் வழியாக அமைதியைப் பெறவும் தலத்திருஅவை முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இயேசுவின் இரக்கம் நிறைந்த திருமுகம், நம் துன்பங்களை அகற்றி விடுகிறது. புனித சார்லஸ், திருத்தந்தை புனித 5ம் பத்திநாதரிடம் கூறியதுபோன்று, திருத்தந்தையே, நாங்களும் தங்களுக்காகச் செபிக்கின்றோம் என்பதை உறுதியுடன் தெரிவிக்கிறோம். இவ்வாறு கர்தினால் ஸ்கோலா அவர்கள், சிறிய வரவேற்புரை வழங்கிய பின்னர், இச்சந்திப்பு, கேள்வி பதில் முறையில் நடைபெற்றது.  மரபுவழி கையளிக்கப்பட்ட பணிகளில், அருள்பணியாளர்கள், தங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிட வேண்டியச் சூழலில், பன்முகக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள இன்றைய மிலான் சமுதாயம் விடுக்கும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், நற்செய்திப் பணியின் மகிழ்வை உணர நாங்கள் செய்ய வேண்டியதென்ன என்று, அருள்பணி கபிரியேலே ஜோயா அவர்கள், முதலில் தன் கேள்வியை முன்வைத்தார்.

அடுத்து, 1990ம் ஆண்டு முதல், தியாக்கோனாக மறைப்பணியாற்றும் Roberto Crespi அவர்களின் கேள்விக்கும் பதில் சொன்னார் திருத்தந்தை. தற்போது மிலானில் 143 தியாக்கோன்கள் மறைப்பணியாற்றுகின்றனர். திருமணமாகி அல்லது திருமணமாகாமல் குடும்பங்களில் இருந்துகொண்டு இவர்கள் பணியாற்றுகின்றனர். தியாக்கோன்களாகிய நாங்கள் எங்கள் பணியில் எவ்வாறு திருஅவையின் முகத்தைப் பிரதிபலிப்பது? என்பது இவரது கேள்வி.

மூன்றாவதாக, ஊர்சுலின் அருள்சகோதரிகள் சபையின் அருள்சகோதரி Paola Paganoni அவர்கள், இன்றைய உலகின் மனிதருக்கு, சிறுபான்மையினராக உள்ள அருள்சகோதரிகள், இறைவாக்கின் சான்றுகளாக, கற்பு, ஏழ்மை, பணிவு ஆகிய வார்த்தைப்பாட்டு வாழ்வை எவ்வாறு வாழ்வது? என்று கேட்ட கேள்விக்கும் பதில் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தக் கேள்விகளுக்கு விரிவான பதில்களை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் எல்லாருடனும் சேர்ந்து செபித்து, அனைவருக்கும், தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்து, இச்சந்திப்பை நிறைவு செய்தார். பின்னர், மிலான் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம், அன்புச் சகோதர, சகோதரிகளே, உங்களின் அமோக, இனிய வரவேற்பிற்கு மிக்க நன்றி. ஆண்டவருக்கும், அவரின் விருப்பத்திற்கும், இறைமக்களுக்கும் நான் பணிபுரிவதற்கு உதவியாக, எனக்காகச் செபியுங்கள் என்று சொல்லி, எல்லாருடனும் சேர்ந்து, மூவேளை செபத்தையும் செபித்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.