2017-03-25 15:19:00

மிலான் “வெள்ளை வீடுகள்” குடியிருப்புப் பகுதியில் திருத்தந்தை


மார்ச்,25,2017. மார்ச் 25, இச்சனிக்கிழமை, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழா. இறைவார்த்தை உயிருள்ளது, வலிமை மிக்கது. இதயங்களில் மனமாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது என்ற டுவிட்டர் செய்தியை இந்நாளில் வெளியிட்டார் திருத்தந்தை. இந்நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் மிகப் பெரிய மறைமாவட்டமான மிலான் உயர்மறைமாவட்டத்திற்கு ஒருநாள் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டார். காலை 7.10 மணியளவில், உரோம் ஃபியூமிச்சினோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை, காலை 8.15 மணிக்கு, மிலான் லினாத்தே விமான நிலையத்தை அடைந்தார். திருத்தந்தையை வரவேற்கும் அடையாளமாக, அந்நேரத்தில், மிலான் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த 1,107 பங்குகளில் அமைந்துள்ள, பங்கு ஆலயங்கள், சிற்றாலயங்கள், துறவு இல்ல ஆலயங்கள் அனைத்திலும், ஒரே நேரத்தில் கோவில் மணிகள் ஒலித்தன. லினாத்தே விமான நிலையத்திலிருந்து, “வெள்ளை வீடுகள் (Case Bianche)” என அழைக்கப்படும், ஏழைகள் வாழும் குடியிருப்புப் பகுதிக்கு முதலில் சென்றார் திருத்தந்தை. இத்தாலியின் வர்த்தக மற்றும், பணக்கார நகரமுமாக அமைந்துள்ள மிலானுக்கு மேற்கொண்ட இந்தப் பயணத்தில், முதலில் ஏழைகள் வாழும் பகுதிக்குத் திருத்தந்தை சென்றது, அவர் சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்கள் மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளார் என்பதையே காட்டுகின்றது.  மிலானில் 1929ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக, வேலையின்றி இருந்த ஏழைகளுக்கென, Forlanini என்ற இப்பகுதியில், 1930ம் ஆண்டில் வீடுகள் கட்டப்பட்டன. நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அவை இடிக்கப்பட்டு, சிறு சிறு வீடுகளாக அமைக்கப்பட்டன. இங்கு வாழ்கின்றவர்களில், ஏறக்குறைய நாற்பது விழுக்காட்டினர் இத்தாலியைச் சேராதவர்கள். இவ்விடத்தில், Rom நாடோடி இனத்தவர், இஸ்லாமியர்,  புலம்பெயர்ந்த குடும்பத்தினர் போன்றோர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருக்கும், வலிப்பு நோயால் துன்புறும் 59 வயது நிரம்பிய லீனோ பாஸ்குவாலே தம்பதியர், 1989ம் ஆண்டில் மொரோக்கோவிலிருந்து மிலான் வந்து வாழ்கின்ற Mihoual Abdel Karin தம்பதியர், நோயால் கடுமையாய்த் துன்புறும் 82 வயது நிரம்பிய Nuccio Oneta தம்பதியர் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று, சிறிது நேரம் செலவிட்டார் திருத்தந்தை. அச்சமயத்தில், செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இவ்வீடுகளைப் பார்வையிட்ட பின்னர், அப்பகுதியில் வாழும் மக்களைச் சந்தித்து தன் எண்ணங்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையில் இரக்கத்தின் யூபிலி ஆண்டு தொடங்கிய பின்னர், மிலான் உயர்மறைமாவட்டம், மிலானில் துன்புறும் மக்களுக்கு உதவ நினைத்தது. அந்நகரில் ஐந்தாயிரம் வீடுகளில், மக்கள் வாழாமல், அவை காலியாக இருந்தன. அதேநேரம், 29 ஆயிரம் மக்கள் தங்க இடமின்றி இருந்தனர். இதனால், மிலான் உயர்மறைமாவட்டத்தின் அம்புரோசியானா காரித்தாஸ் நிறுவனம், மிலான் வீட்டுவாரியத் துறையிடம் இது குறித்து கூறி, 55 இல்லங்களைப் பெற்று, அவற்றைப் புதுப்பித்தது அந்நிறுவனம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மிலான் நகர் மேய்ப்புப்பணி பயணத்தையொட்டி, மிலான் உயர்மறைமாவட்டம், அவற்றை, வறியோருக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் வழங்கியுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், EU என்ற ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் மற்றும், அரசுகளின் 27 தலைவர்களை, இவ்வெள்ளி மாலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றுகையிலும், புலம்பெயர்ந்தவர்கள் மீது ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படுமாறும், ஐரோப்பியத் தலைவர்களின் திட்டங்களில் மனிதர் மையப்படுத்தப்பட வேண்டுமென்றும், கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.