2017-03-28 15:34:00

"அனைத்தும் அருளே என்பதை உணர்வோம்" – டுவிட்டர் செய்தி


மார்ச்,28,2017. "தூய ஆவியாரின் ஒளியில் நாம் அனைத்தையும் வாசிப்பதற்குக் கற்றுக்கொள்வோமெனில், அனைத்தும் அருளே என்பதை உணர்வோம்" என்று தன் டுவிட்டர் பக்கத்தில், இச்செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை தலைமையேற்று நடத்தும் புனித வார நிகழ்ச்சிகள் குறித்த புதிய விவரங்களை, இச்செவ்வாயன்று திருப்பீடம் வெளியிட்டுள்ளது.

குருத்தோலை ஞாயிறான, ஏப்ரல் 9ம் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் காலை திருப்பலி நிறைவேற்றுவார்.

'வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் செயல்கள் புரிந்துள்ளார்' என்ற தலைப்புடன், குருத்தோலை ஞாயிறன்று, 32வது உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 13, புனித வியாழனன்று காலையில், தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியும், வெள்ளி மாலை, 5 மணிக்கு, இயேசுவின் பாடுகள் திருவழிபாடும் நிகழ்த்தும் திருத்தந்தை, வெள்ளி இரவு 9.15 மணிக்கு, உரோம் நகரின் கொலோசெயம் திறந்தவெளி அரங்கில், சிலுவைப்பாதையை வழிநடத்துவார்.

15ம் தேதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு, தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாட்டையும், திருப்பலியையும் நிறைவேற்றும் திருத்தந்தை, உயிர்ப்பு ஞாயிறு காலை 10 மணிக்கு புனித பேதுரு வளாகத்தில் திருப்பலியாற்றியபின், 12 மணிக்கு, அவ்வளாக மேல்மாடத்திலிருந்து, Urbi et Orbi என்ற 'ஊருக்கும் உலகுக்கும்' செய்தியை வழங்குவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.