2017-03-28 15:29:00

அமைதிக்குரிய வளங்கள், ஆயுதங்களுக்கெனச் செல்கின்றன


மார்ச்,28,2017. ஒருவரையொருவர் அழிவுள்ளாக்குவதை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை அனுமதிப்பது, ஐ.நா. அமைப்பின் உள்ளுணர்வுகளுக்கு எதிரானதாகும், என ஐ.நா. அவைக் கூட்டமொன்றிற்கு செய்தி அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாரம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க்கில் இடம்பெறும் 'அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பது' குறித்த ஐ.நா. அவைக் கூட்டத்திற்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழ்மை, பயங்கரவாதம், பாதுகாப்பின்மை ஆகிய பல்வேறு பிரச்னைகளுக்கு, அணு ஆயுத வளர்ச்சியும் ஒரு காரணமாக உள்ளது என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியை ஊக்குவிக்கவும், ஏழ்மையை ஒழிக்கவும் பயன்படுத்தப்படவேண்டிய வளங்கள், அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவது குறித்து, தன் செய்தியில், கவலையை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை.

அச்சத்தின் வழியாக நிலையான தன்மையை உருவாக்க முடியுமா என்ற கேள்வியை ஒவ்வொருவரும் எழுப்பவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியைக் கொணர்வதற்கு, நீதியும், ஒன்றிணைந்த மனிதகுல வளர்ச்சியும், மனித உரிமை மதித்தலும், இயற்கை பாதுகாப்பும், மனிதர்களிடையே நம்பிக்கையும், கல்வி, ஒருமைப்பாட்டுணர்வு, கலந்துரையாடல் போன்றவையும் முக்கியமானவை, என தன் செய்தியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.