2017-03-28 16:03:00

மும்பையில் அமைதிக்கான 7 மணி நேர தவக்கால ஊர்வலம்


மார்ச்,28,2017. மும்பை நகரில், ஏறத்தாழ 25,000 மக்கள் ஒன்றிணைந்து, அமைதிக்கான 7 மணி நேர தவக்கால ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

சனிக்கிழமை இரவு 10.30 மணிக்குத் துவங்கிய இந்த தவ ஊர்வலத்தில், கத்தோலிக்கர்களுடன் பிற கிறிஸ்தவ சபையினரும், ஏனைய மதத்தவரும் கலந்துகொண்டனர்.

20 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம் கடந்த இந்த அமைதி ஊர்வலம், ஞாயிறு காலை 5.30 மணிக்கு, மும்பையின் மலைமாதா பசிலிக்காவை அடைந்தபோது, அங்கு, திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கினார், மும்பைப் பேராயர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

இந்தியாவில் ஒவ்வொருவரும் அமைதியிலும், நல்லிணக்கத்துடனும் ஒன்றிணைந்து வாழ இறைவனை நோக்கி செபிப்பதாகக் கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் மத நம்பிக்கையுடன் அனைத்து மதங்களையும் மதிக்கும் சகிப்புத்தன்மையில் வாழவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

அமைதியின் அரசியான அன்னை மரியா, துயர்களின் அன்னை மரியா, சிலுவையைச் சுமக்கும் இயேசு, புனித வளன் என நான்கு திரு உருவச் சிலைகளை சுமந்து, இவ்வூர்வலத்தில் பங்கேற்ற மக்களில், பாதிக்கும் மேற்பட்டோர் இளையோர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.