சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

சிரியாவுக்கு வருவோர், நரகம் என்ற கொடுமையை உணர்வர்

Santa Maria delle Grazie பங்கு கோவிலின் பொறுப்பை ஏற்கும், சிரியா நாட்டின் திருப்பீடத் தூதர், கர்தினால் மாரியோ செனாரி - RV

29/03/2017 16:43

மார்ச்,29,2017. நரகத்தை நம்பாதவர்கள், சிரியா நாட்டிற்கு வந்தால், நரகம் என்ற கொடுமையை ஓரளவு உணர்வார்கள் என்று, சிரியா நாட்டின் திருப்பீடத் தூதர், கர்தினால் மாரியோ செனாரி (Mario Zenari) அவர்கள், இத்தாலியில் நிறைவேற்றிய ஒரு திருப்பலியில் கூறினார்.

நான்கு மாதங்களுக்கு முன், கர்தினாலாக உயர்த்தப்பட்ட கர்தினால் செனாரி அவர்கள், மார்ச் 25, கடந்த ஞாயிறன்று, உரோம் நகரின் Santa Maria delle Grazie alle Fornaci என்ற பங்குக் கோவிலின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வேளையில், தான் பணியாற்றும் சிரியா நாட்டின் அவலங்களைக் குறித்து, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

கடந்த 6 ஆண்டுகளாக சிரியாவில் நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போரினால் இறந்தோர், காயமுற்றோர், புலம்பெயர்ந்தோர், பாதிக்கப்பட்டக் குழந்தைகள் ஆகியோரைக் குறித்து, புள்ளிவிவரங்களை வழங்கிய கர்தினால் செனாரி அவர்கள், இது, இரக்கமற்ற படுகொலையாக மனித வரலாற்றில் கட்டாயம் இடம்பெறும் என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உள்ளம் ஒவ்வொரு நாளும் சிரியாவைக் குறித்து சிந்தித்து வருகிறது என்றும், அவர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள மிகுந்த ஆவலாக இருந்தாலும், பாதுகாப்பு கருதி அங்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார் என்றும், கர்தினால் செனாரி அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு என்பது, அவரது தனிப்பட்ட உயிரைக் குறித்த கவலை அல்ல, மாறாக, அவரைக் காண மக்கள் கூடிவரும் வேளையில், அங்கு தாக்குதல்கள் நிகழ்ந்தால், தன் பயணம், மேலும் பல உயிர்களைக் கொல்லும் என்ற எண்ணமே, திருத்தந்தையை, இப்பயணத்திலிருந்து தடுக்கிறது என்றும், கர்தினால் செனாரி அவர்கள் விளக்கிக்கூறினார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி

29/03/2017 16:43