சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

மறைக்கல்வியுரை: எதிர்நோக்கிற்கு இடமில்லையெனினும் எதிர்நோக்கு

புதன் மறைக்கல்வியுரையின்போது திருத்தந்தை - ANSA

29/03/2017 15:55

மார்ச்,29,2017. கிறிஸ்தவ எதிர்நோக்குக் குறித்து புதன் மறைக்கல்வி உரைகளில், தொடர்ந்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்றும், தூய பேதுரு வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க, 'எதிர் நோக்கிற்கு இடமில்லாத இடங்களிலும் எதிர்நோக்கைக் கொண்டிருத்தல்' என்ற தலைப்பில், தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மறைக்கல்வி உரையின் துவக்கத்தில், தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலின் 4ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி – உரோமையர் 4,16-19அ.22 - வாசிக்கப்பட, அதையொட்டி, திருத்தந்தையின் உரை இருந்தது.

அன்பு சகோதர சகோதரிகளே! இன்று நாம் வாசிக்கக் கேட்ட, திருமடல் பகுதியில், தூய பவுல் அவர்கள், ஆபிரகாமை, விசுவாசத்தின் தந்தையாக மட்டுமல்ல, நம் எதிர்நோக்குகளின் தந்தையாகவும் காட்டுகிறார். இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது, ஆபிரகாம் நம்பிக்கை கொண்டிருந்தார், என்கிறார், தூய பவுல். தமக்கு வயதாகிவிட்டதால், தமது உடலும், சாராவுடைய கருப்பையும் செத்தவைபோல் ஆற்றலற்றுப் போய்விட்டதை எண்ணிப் பார்த்தபோது, “எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்”என்ற இறைவனின் கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், ஆபிரகாம் எதிர்நோக்கினார், தயங்காமல் நம்பினார். ஆகவே, அவர், பல மக்களினங்களுக்குத் தந்தையானார். விசுவாசத்திற்கும் எதிர்நோக்கிற்கும் இடையே இருக்கும் நெருங்கிய பிணைப்பை, நாம், ஆபிரகாமில் பார்க்கிறோம். இறைவனின் வாக்குறுதிகளில் ஆபிரகாம் கொண்டிருந்த எதிர்நோக்கு, ஈசாக்கின் பிறப்பில் நிறைவேறியது. அதேவண்ணம், காலம் நிறைவுற்றபோது, இயேசுவின் உயிர்ப்பு எனும் வல்லமையால், பாவம் மற்றும் மரணத்திலிருந்து விடுதலைப் பெற்ற பல்வேறு நாடுகளின் புது மனிதக் குலத்தில், இறைவாக்கு நிறைவேறியது. எதிர்நோக்குக்கு இடமேயில்லை என்ற சூழல்களில்கூட நாம் இறைவார்த்தையில் நம் நம்பிக்கையை வைத்து, எதிர்நோக்கை கைக்கொள்ளவேண்டும் என நம் விசுவாசம் நமக்குக் கற்பிக்கிறது. இயேசுவின் உயிர்ப்பை நோக்கிய நம் பயணத்தில், நம் விசுவாசத்திலும் எதிர்நோக்கிலும் நாம் உறுதிப்படுத்தப்பட்டு, இயேசுவின் உயிர்ப்பு வழங்கும் புதிய வாழ்வு குறித்த வாக்குறுதியை ஏற்று, ஆபிரகாமின் பிள்ளைகளாக நம்மை வெளிப்படுத்துவோமாக, என புதன் மறைக்கல்வியை வழங்கிய திருத்தந்தை, இந்த தவக்காலம் உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் அருள் மற்றும் ஆன்மீக புதுப்பித்தலின் காலமாக இருக்கட்டும் என உரைத்தார்.

பின்னர், புதன் மறைக்கல்வி உரையில் பங்குபெற, கர்தினால் Jean-Louis Tauran அவர்களின் தலைமையில் வந்திருந்த, ஈராக் நாட்டு மதப்பிரதிநிதிகளின் குழுவுக்கு தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். அன்பு நிறைந்த ஈராக் நாட்டின் வளம் என்பது, அதன் பன்மைத்தன்மையிலும், ஒன்றிப்புப் பலத்திலும், இணக்க வாழ்விலும் அடங்கியுள்ளது. அந்த நாட்டு மக்கள், இதேப் பாதையில் பயணம் செய்யவேண்டும் என ஊக்கமளிப்பதோடு, அந்நாட்டின் ஒப்புரவிற்காகவும், இணக்க வாழ்விற்காகவும் செபிக்குமாறும் விண்ணப்பிக்கிறேன்.  பல்வேறு இனங்களும் மதங்களும் இணைந்து வாழும் ஈராக் நாட்டில், அமைதியும், ஒன்றிப்பும், வளமும் மேலோங்கி இருப்பதாக.  மொசூல் நகரின் வட மாவட்டங்களில் வாழும் மக்கள் குறித்து என் எண்ணங்கள் திரும்புகின்றன. துன்புறும் இம்மக்களோடு, நான், ஆன்மீக முறையில், செபம் வழியாக இணைந்துள்ளதை உணர்கிறேன். இரத்தம் சிந்தும் இந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் குறித்த ஆழ்ந்த கவலையை வெளியிடும் அதேவேளை, பொதுமக்கள் பாதுகாக்கப்படவேண்டியது இங்குள்ள அத்தியாவசிய, அவசரத் தேவை என்பது உணரப்பட்டு, அனைவரும் அதற்காக தங்களை ஈடுபடுத்தவேண்டும் என்ற என் அழைப்பை மீண்டும் புதுப்பிக்கிறேன்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையையும், ஈராக் நாட்டைக் குறித்த விண்ணப்பத்தையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

29/03/2017 15:55