2017-03-29 16:52:00

சந்திக்கும் சிலுவைகளுக்கு எளிதான தீர்வுகளைத் தேடவேண்டாம்


மார்ச்,29,2017. ஒவ்வொரு நாள் வாழ்விலும் நாம் சந்திக்கும் சிலுவைகளுக்கு எளிதான தீர்வுகளைத் தேடாமல், கிறிஸ்துவுடன் இணைந்து நம் சிலுவைகளைச் சுமப்போமாக என்று, பாகிஸ்தான் ஆயர் ஒருவர், தன் தவக்காலச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

பைசலாபாத் ஆயரும், பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி, அமைதி அவையின் தலைவருமான ஆயர் ஜோசப் அர்ஷத் அவர்கள், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி ஆகிய பிரச்சனைகளில் சிக்கியுள்ள இளையோரை மையப்படுத்தி, தன் தவக்காலச் செய்தியை வழங்கியுள்ளார்.

உயிர்ப்பை நோக்கிச் சென்ற இயேசுவின் சிலுவைப்பாதை, மிகக் கடினமாக இருந்ததென்று தன் செய்தியில் கூறும் ஆயர் அர்ஷத் அவர்கள், வாழ்க்கைப் பாதையில் இளையோர் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்கும் எளிதான தீர்வுகள் இல்லையென்றும், இயேசுவை நம்பிக்கையோடு பின்பற்றினால் வெற்றி நிச்சயம் என்றும், சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பிரச்சனைகளுக்கு தீவிரவாதம் காட்டும் விரைவான தீர்வுகள், அழிவை நோக்கியே இவ்வுலகை அழைத்துச் செல்கின்றன என்றும், இத்தகைய விரைவுத் தீர்வுகள் நிரந்தர நன்மையை தராது என்றும் ஆயர் அர்ஷத் அவர்கள் தன் தவக்காலச் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.