2017-03-30 14:42:00

கர்தினால் நிக்கோல்ஸ் - எந்த ஒரு நாடும் தனித்து வாழமுடியாது


மார்ச்,30,2017. எந்த ஒரு நாடும் தனித்து வாழமுடியாது என்று, வெஸ்ட்மின்ஸ்டர் பேராயரும், ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் துணைத் தலைவருமான கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

Brexit நாள் என்றழைக்கப்படும் மார்ச் 29, இப்புதனன்று, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்துசெல்வதற்கு தன் ஒப்புதலை அளித்துள்ளதைத் தொடர்ந்து, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த முடிவு, பிரித்தானிய மக்களிடையே கலப்படமான ஓர் உணர்வை உருவாகியுள்ளது என்று கூறினார்.

இளையோரை மையப்படுத்தி இஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், அடுத்த ஈராண்டுகள், பிரித்தானிய அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஏனைய நாடுகளிலிருந்து தனித்து இயங்குவதால், பிரித்தானியா பாதுகாப்புடன் இருக்கும் என்ற கற்பனையை உடைக்க, அண்மையில் இலண்டனில் நிகழ்ந்த தாக்குதல் போதுமான எச்சரிக்கையாக அமைந்தது என்று, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

இலண்டனில், 82 நொடிகள் மட்டுமே நடந்த இத்தாக்குதலில், துயரமான உண்மைகள் அதிகம் நிகழ்ந்தன என்றாலும், தாக்குதல் நிகழ்ந்ததும், அருகிலிருந்த மருத்துவமனையின் மருத்துவர்களும், பணியாளர்களும், தங்கள் பாதுகாப்பை பெரிதாகக் கருதாமல், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிர்களைக் காக்க போராடியது, நம்பிக்கை தருகிறது என்று கர்தினால் நிக்கோல்ஸ் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.