2017-03-30 14:32:00

செபத்தின் வல்லமை, தீமையை வென்று, அமைதியைக் கொணரும்


மார்ச்,30,2017. 'செபம் வல்லமையுடையது. செபம் தீமையை வெற்றிகொள்கிறது. செபம் அமைதியைக் கொணர்கிறது' என தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வியாழனன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதே நாளில், Taizé கிறிஸ்தவ அமைப்பின் தலைவரான சகோதரர் Alois அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்காகப் பணியாற்றும் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால்  Kurt Koch அவர்களும் வியாழன் காலையில் திருத்தந்தையை சந்தித்து உரையாடினார்.

இதற்கிடையே, திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவோருக்கு உதவும் நோக்கத்தில், இணைய தளத்தில், டுவிட்டர் மற்றும் Instagram பக்கங்களைத் திறந்துள்ளது, Peter’s Pence என்ற, திருத்தந்தையின் பிறரன்பு அமைப்பு.

ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதம் முதல், இணையதளப் பக்கம் ஒன்றைத் துவக்கி  செயல்பட்டுவரும் Peter’s Pence அமைப்பு, மார்ச் 1ம் தேதி முதல், இத்தாலியம், ஆங்கிலம் மற்றும் இஸ்பானியம் ஆகிய மொழிகளில் டுவிட்டர் பக்கங்களையும், ஒரேயொரு Instagram பக்கத்தையும் திறந்து, பிறரன்புப் பணிகளுக்கு உதவ விரும்பும் மக்களுடன் நேரடி உறவை உருவாக்க முயன்று வருவதாக, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வெளியிட்ட செய்தி கூறுகிறது. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.