2017-04-01 16:46:00

இயேசுவின் பொறுமையும், அக்கறையும் கல்வியாளர்களுக்குத் தேவை


ஏப்.,01,2017. திருஅவைக்கும் பெரு நாட்டு சமுதாயத்திற்கும் கல்விப்பணி வழியாகச் சேவையாற்றிவரும் பெரு கத்தோலிக்க பாப்பிறை பல்கலைக் கழகத்திற்கு தன் நன்றியை தெரிவிப்பதாக அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெரு நாட்டு பாப்பிறை பல்கலைக் கழகம் தன் நூறாவது ஆண்டைச் சிறப்பிப்பதையொட்டி, அதன் தலைவர் கர்தினால் Giuseppe Versaldi அவர்களுக்கு வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல் ஆசிரியராம் இயேசுவைப் பின்பற்றும் இந்த பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்கள் அனைவரும், அவரைப்போல் பொறுமையுடனும், மக்கள் மீது உள்ள அக்கறையுடனும் செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை, கனிதரும் விதமாக மாற்றவேண்டுமெனில், பொறுமையும் இறையருளும் இன்றியமையாதவை எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்விப் பணிகள் வழியாக, நாம் ஒவ்வொருவரும், இறைவனின் கைவேலைப்பாடுகளுக்கு வடிவம் கொடுப்பதில் ஒத்துழைக்கிறோம் என்று கூறினார்.

ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சேவையாற்றும்போது, அவரவர் தங்களின் அழைப்புக்கு இயைந்தவகையில் பங்களிப்பதால், கல்வியின் தரம் மட்டுமல்ல, மனிதபிமானமும் வளர்ச்சியை அனுபவிக்கின்றது என மேலும் கூறினார் திருத்தந்தை.

கல்வி கற்பது மட்டும் போதாது, மற்றவர்களை வாழ்வுக்குக் கொணர, அவர்களிடையே புளிக்காரமாக செயல்பட வேண்டிய கிறிஸ்தவர்களின் கடமையையும் பெரு கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பியுள்ள தன் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.