2017-04-01 16:28:00

உரோம் நகரின் San Jose பாப்பிறை கல்லூரியின் 125ம் ஆண்டு


ஏப்.,01,2017. உரோம் நகரிலுள்ள இஸ்பானிய பாப்பிறை அருள்பணியாளர் கல்லூரியின் 125ம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி, அக்கல்லூரியின் அங்கத்தினர்களை இச்சனிக்கிழமை காலை, திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும், முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக' என, இயேசு, மறைநூல் அறிஞர் ஒருவருக்கு வழங்கிய பதிலை மையமாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை, 125 ஆண்டுகளாக உரோம் நகரின் San Jose பாப்பிறை கல்லூரி, இஸ்பானிய அருள்பணியாளர்களுக்கு ஆற்றிவரும் பணிகளுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

முழு இதயத்தோடும், உள்ளத்தோடும், ஆற்றலோடும் இறைவனுக்குப் பணிபுரிவது என்பது, தன்னலம் துறப்பதையும், அயலவருக்கு முழு மனதோடு பணிபுரிவதையும், தாழ்ச்சியையும், பிறரன்பையும் உள்ளடக்கியது என்று தன் உரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை.

மேலும், நம் செல்வம் எங்குள்ளதோ அங்கே நம் உள்ளமும் இருக்கும் என்பதை மனதில் கொண்டு, இயேசுவைப்போல் இதயத்தில் ஏழ்மை உணர்வுடன் செயலாற்றுவோம் என்றும் திருத்தந்தை விண்ணப்பித்தார்.

உண்மையான சமூக நீதிக்கு நம்பத்தகுந்த ஊக்கமளிப்பவர்களாக ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் என்று இஸ்பானிய பாப்பிறை அருள்பணியாளர் கல்லூரியின் அங்கத்தினர்களிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.