2017-04-01 16:20:00

திருத்தலங்கள் - புதிய வழி நற்செய்தி பணி திருப்பீட அவை


ஏப்.,01,2017. இன்றைய காலத்திலும், மக்கள் பெருமளவில், பக்தியுடன் கூடும் இடங்களாக, உலகின் திருத்தலங்கள் விளங்கிவருவதால், அவற்றில் நற்செய்தியை அறிவிக்கும் திட்டங்களை வடிவமைக்கும் பொறுப்பை, புதிய வழி நற்செய்தி அறிவிப்பு பணி திருப்பீட அவையிடம் ஒப்படைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் சுயவிருப்பத்தின் பேரில் வெளியிடும் விதிமுறைகள் என்று பொருள்படும் Motu Proprio அறிவிப்பு ஒன்றை இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகளிடம் உண்மையான பக்தி வெளிப்பட காரணமாக அமையும் திருத்தலங்களின் வழியாக, புதிய வழியில் நற்செய்தியை அறிவிக்கும் பல்வேறு அம்சங்கள் இத்திருப்பீட அவையின் பொறுப்பில் வழங்கப்பட்டுள்ளதென கூறியுள்ளார்.

உலகெங்கும் திருத்தலங்களை உருவாக்குதல், திருத்தலங்களில் மேய்ப்புப்பணித் திட்டங்களை வகுத்தல், திருத்தலங்களில் பணியாற்றுவோருக்கு பயிற்சி அளித்தல், திருப்பயணிகளுக்கு உதவும் வகையில், திருத்தலங்களின் கலாச்சார, மற்றும், கலையழகை மேம்படுத்துதல் போன்ற பணிகளை, புதிய வழி நற்செய்தி அறிவிப்பு பணி திருப்பீட அவையிடம் ஒப்படைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மக்களின் வாழ்வில் திருத்தலங்கள் உருவாக்கியுள்ள நல்ல மாற்றங்கள், திருப்பயணிகள் பெரும் எண்ணிக்கையில் வருகை தருதல், திருத்தலங்களில் நடைபெறும் திருவழிபாடுகளில் மக்களின் பங்கேற்பு, திருப்பயணிகள் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு சாட்சியம் வழங்குதல் போன்ற செயல்பாடுகள், புதியவழி நற்செய்தியை அறிவிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும், திருத்தந்தை தன் Motu Proprio அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.