2017-04-03 17:24:00

மனித வர்த்தகம், உலகின் மிகப்பெரும் அவமானம்


ஏப்.,03,2017. மக்களை வர்த்தகப் பொருள்களாகக் கடத்துவதும், இது, மிகப்பெரும் பணம் கொழிக்கும் வியாபாரமாகத் திகழ்வதும், இன்றைய உலகின் மிகப்பெரும் அவமானமாக உள்ளது என்ற திருத்தந்தையின் செய்தியை, வியன்னா கருத்தரங்கில் வாசித்தளித்தார், திருப்பீடத்தின் உயர் அதிகாரி, இயேசு சபை அருள்பணி, மைக்கில் செர்னி (Michael Czerny).

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பிரிவின் நேரடிச் செயலர், அருள்பணி செர்னி அவர்கள், மனித கடத்தல் குறித்து, வியன்னாவில் இடம்பெறும் 17வது கருத்தரங்கில் திருத்தந்தையின் செய்தியை வழங்கினார்.

'குழந்தைகளை வர்த்தகப் பொருள்களாகக் கடத்துதல்' குறித்து விவாதிக்கும் இக்கருத்தரங்கில், இத்திங்களன்று உரையாற்றிய அருள்பணி செர்னி அவர்கள், குழந்தைகளை வர்த்தகப் பொருள்களாக கடத்தும் நிலை என்பது, ஒருவிதமான அடிமைத்தனம் மட்டுமல்ல, மனிதகுலத்திற்கு எதிரான, பெரும் குற்றமும், மனித உரிமை மீறலுமாகும் என்று, தன் செய்தியில் திருத்தந்தை கூறியுள்ளதை எடுத்துரைத்தார்.

குழந்தைகளின் நலன் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அரசுகளிடையே ஒன்றிணைந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், பல இலட்சக்கணக்கான மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்க, சட்ட, மற்றும், சமூக முயற்சிகளை ஒருங்கிணைப்பதும் அவசியம் என்பதையும் வியன்னா கருத்தரங்கிற்கு வழங்கப்பட்ட திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.