2017-04-04 16:13:00

இன்றைய உலகின் நிலைகள் குறித்து மும்பை கர்தினால் கவலை


ஏப்.,04,2017. இரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்  இடம்பெற்ற தாக்குதல், பாகிஸ்தானின் சுஃபி மசூதியில் இடம்பெற்ற சித்ரவதைக் கொலைகள் ஆகியவைக் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், ஆசிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

11 பேர் உயிரிழந்ததற்கும் 45 பேர் காயமடைந்ததற்கும் காரணமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தாக்குதல், 20 பேர் கொடுமைப்படுத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சர்கோதா நகர் சுஃபி மசூதி நிகழ்வு போன்றவை, பெரும் துன்பத்தைத் தருகின்றன என்று, மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

மேலும், பெரு நாட்டின் வெள்ளப் பெருக்கு, சலேசிய சபை அருள்பணியாளர் டாம் உழுனல்லில் அவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது போன்றச் செய்திகள், மேலும் துன்பத்திற்கு காரணங்களாக உள்ளன என்று கவலையை வெளியிட்டுள்ளார், கர்தினால் கிரேசியஸ்.

இத்தகைய கொடுமைகள் எந்நாளில் மாற்றம் பெறும் என்ற ஏக்கத்தையும் வெளியிட்டுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், 'அகிம்சை என்பது, அமைதிக்கான அரசியல் பாணி' என்பதை, இவ்வாண்டின் உலக அமைதி நாள் செய்தியின் மைப்பொருளாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்த்து, ஊக்கம் தருவதாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

ஆதாரம் :  AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.