2017-04-04 16:04:00

தனி மனித, முழு மனித வளர்ச்சிக்கு உதவுதல் - திருத்தந்தை


ஏப்.,04,2017. இருப்பவர், இல்லாதவரிடையே நிலவும் இடைவெளி அதிகரித்துவரும் இன்றையச் சூழலில், மனிதகுலம், ஒன்றிப்பு நோக்கிச் செல்லும் பாதையே, அமைதியான, மற்றும், நம்பிக்கையான வருங்காலத்தைக் கொடுக்க இயலும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

திருத்தந்தை அருளாளர் ஆறாம் பால் அவர்கள், 'Populorum Progressio' என்ற சுற்றுமடலை வெளியிட்டு 50 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை ஏற்பாடு செய்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டோரை இச்செவ்வாய் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனி மனித வளர்ச்சிக்கும், முழு மனித வளர்ச்சிக்கும் உதவுதல் என்ற கருத்தில் அவர்களுக்கு உரை வழங்கினார்.

ஒருங்கிணைந்த மனிதகுல வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் பங்களிக்கையில், பொது சமுதாயத்திற்கு நல்லவை செய்வதிலிருந்து யாரும் விலக்கிவைக்கப்படுவதில்லை என்பதை, தன் உரையில் வலியுறுத்தியத் திருத்தந்தை, பொருளாதாரம், வேலை, கலாச்சாரம், குடும்பவாழ்வு, மதம் என்று எதுவுமே, மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதில்லை என்று எடுத்துரைத்தார்.

வளர்ச்சி என்பது, பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிப்பிடவில்லை, ஏனெனில், உடலும், ஆன்மாவும் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டியது அவசியம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு கொணர்ந்த, குணப்படுத்தல், விடுதலை மற்றும் ஒப்புரவு ஆகியவை, ஒன்றிணைந்த மனித வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவை என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.