2017-04-04 16:23:00

புனித பத்தாம் பயஸ் அமைப்பை திருஅவையுடன் இணைக்கும் முயற்சி


ஏப்.,04,2017. திருஅவையிலிருந்து தடைச் செய்யப்பட்ட புனித பத்தாம் பயஸ் அமைப்பை, மீண்டும் திருஅவையுடன் இணைக்கும் முயற்சிகளில் ஒன்றாக, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயம்.

திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலுடன், திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயமும், இந்த இணைப்புக்காக உருவாக்கப்பட்ட Ecclesia Dei என்ற அவையும் இணைந்து, இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமணம் எனும் அருளடையாளத்தை நிறைவேற்றுகையில், புனித பயஸ் அமைப்பின் அருள்பணியாளர்கள், திருஅவை அருள்பணியாளர்களுடன் திருப்பலி நிறைவேற்றி உதவி புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது

திருஅவையின் அங்கீகாரம் பெற்ற குருக்களோடு இணைந்து, புனித பயஸ் அமைப்பின் அருள்பணியாளர்கள், திருமண அருடையாள திருப்பலியை நிறைவேற்றினாலும், திருமணத் தம்பதியர் வழங்கும் திருமண ஒப்புதலை, திருஅவை அருள்பணியாளர்களே முன்னின்று பெறவேண்டும் எனவும், கட்டுப்பாட்டை முன்வைத்துள்ளது, இந்த புதிய அறிக்கை.

திருமணம் எனும் அருளடையாளத்தை விசுவாசிகளுக்கு நிறைவேற்றும்போது, திருஅவை அங்கீகாரம் பெற்ற அருள்பணியாளர்கள் இல்லாத சூழலில், புனித பயஸ் அமைப்பின் அருள்பணியாளர்களுக்கு தல ஆயர் அனுமதி வழங்க முடியும், ஆனால், அத்திருமணம் குறித்த அனைத்து ஆவணங்களும் உடனடியாக மறைமாவட்ட அலுவகத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் எனவும் கட்டுப்பாட்டை முன்வைத்துள்ளது, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் அறிக்கை.

ஒப்புரவு எனும் அருளடையாளத்தை நிறைவேற்ற ஏற்கனவே அண்மையில் புனித பயஸ் அமைப்பின் அருள்பணியாளர்களுக்கு அனுமதியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது, திருமணம் எனும் அருளடையாளத்தை, கத்தோலிக்க அருள்பணியாளருடன் இணைந்து நிறைவேற்றும் அதிகாரத்தை வழங்கியுள்ளார்.

1970ம் ஆண்டு, பேராயர் Marcel Lefebvre அவர்களால் உருவாக்கப்பட்ட புனித. பயஸ் அமைப்பு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்கு பின்னர் 1969ம் ஆண்டு கொணரப்பட்ட திருப்பலி வழிபாட்டுமுறை சீர்திருத்தங்களை ஏற்க மறுத்து, பழைய வழிபாட்டுமுறைகளையே பின்பற்றி வந்தது. பேராயர் Lefebvre அவர்கள், 1976ம் ஆண்டு, திருஅவையின் எச்சரிக்கையை புறக்கணித்து, அருள்பணியாளர்களை திருநிலைப்படுத்தியது, 1988ம் ஆண்டில், 4 அருள்பணியாளர்களை, ஆயர்களாக திருநிலைப்படுத்தியது, ஆகியவற்றைத் தொடர்ந்து தடைச் செய்யப்பட்ட புனித பயஸ் பக்தி அமைப்பை திருஅவைக்குள் ஏற்கும் முயற்சிகள், 2009ம் ஆண்டு துவக்கப்பட்டு, தற்போது தொடர்ந்து வருகின்றன.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.