2017-04-05 16:23:00

Populorum Progressio 50ம் ஆண்டு திருப்பலியில் மறையுரை


ஏப்.,05,2017. 'மனித முன்னேற்றம்' என்ற பொருள்படும் Populorum Progressio என்ற திருமடலை, திருத்தந்தை, அருளாளர் 6ம் பால் அவர்கள், 1967ம் ஆண்டு உயிர்ப்புத் திருநாளன்று வெளியிட்டபோது, அம்மடலை, 'உயிர்ப்பின் திருமடல்' என பலர் அழைத்தனர் என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இத்திங்களன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

Populorum Progressio என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, வத்திக்கானில் ஏற்பாடு செய்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு, கர்தினால் பரோலின் அவர்கள் துவக்கத் திருப்பலி ஆற்றியபோது, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

மனிதரை மையப்படுத்தி அருளாளர் திருத்தந்தை 6ம் பால் அவர்கள் எழுதிய திருமடலின் 50ம் ஆண்டு நிறைவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆர்வத்தால், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை உருவாக்கப்பட்ட காலமும் இணைந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளதென்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

மனிதம் உலகெங்கும் பரவவேண்டும் என்ற நோக்கத்துடன் திருத்தந்தை 6ம் பால் அவர்கள் எழுதிய இத்திருமடலையடுத்து, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் Sollicitudo Rei Socialis என்ற திருமடலையும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் Caritas in Veritate திருமடலையும் வெளியிட்டனர் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

தனி மனித முன்னேற்றம், மற்றும், மனித சமுதாய முன்னேற்றம், இரண்டும், துவக்கமும், முடிவுமான இறைவனில் தங்கள் அடித்தளத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில், திருஅவையும், திருத்தந்தையரும் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்ததை காணமுடிகிறது என்று, கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்.25,40) என்று மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை உருவானதற்கு அடித்தளமாக உள்ளது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், மனிதகுலத்தின் உடல்-ஆன்மா, ஆண்-பெண், தனிமனிதர்-சமுதாயம் என்ற மூன்று உண்மைகளின் மீதும் கவனம் செலுத்துவதே, முழு மனித முன்னேற்றமாகும் என்று வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.