2017-04-05 16:21:00

கோவா உயர் மறைமாவட்டத்தில் பாத்திமா அன்னை விழா


ஏப்.,05,2017. பாத்திமாவில் அன்னை மரியா காட்சி கொடுத்த புதுமையின் 100ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, இந்தியாவின், கோவா-டாமன் உயர் மறைமாவட்டம், முனைப்புடன் ஏற்பாடுகளை செய்துவருவதாக அறிவித்துள்ளது.

1917ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி முதல், அக்டோபர் 13ம் தேதி முடிய அன்னை மரியா ஐந்து முறை தோன்றியதைக் கொண்டாடும் வகையில், இவ்வாண்டு மே மாதம் 13ம் தேதி முதல் கொண்டாட்டங்கள் துவங்கும் என்றும், குறிப்பாக, அன்னை மரியா தோன்றிய ஐந்து நாட்களில் சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும், கோவா உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Filipe Neri Ferrao அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறியுள்ளார்.

உண்மையான மனமாற்றம், செபம், மற்றும் தவ முயற்சிகளில் ஈடுபடுதல் என்று, அன்னை மரியா, பாத்திமா திருத்தலத்தில் வெளியிட்ட செய்திகளை மீண்டும் நடைமுறைப்படுத்த, இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்கள் உதவியாக இருக்கும் என்று பேராயர் Ferrao அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களையொட்டி, கோவா-டாமன் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கோவில்களிலும், மேமாதம் 13ம் தேதி முதல், அக்டோபர் 13ம் தேதி முடிய செபமாலை பக்தி முயற்சி சிறப்பாக நடைபெறும் என்று நூற்றாண்டு விழா குழு அறிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.