சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ நேர்காணல்

நேர்காணல் – இக்கால இளையோரை புரிந்து கொள்வது எப்படி?

போபாலில் குருத்தோலை ஞாயிறு - EPA

06/04/2017 15:57

ஏப்.06,2017. ஏப்ரல் 9, வருகிற ஞாயிறு, குருத்தோலை ஞாயிறு. அன்று 32வது உலக கத்தோலிக்க இளையோர் தினம். அன்றைய நாளில், உலகில் அனைத்து மறைமாவட்டங்களிலும், இத்தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இத்தினத்தையொட்டி, சலேசிய சபையின் அ.பணி.ஜெயசீலன் அவர்கள், இக்கால இளையோரை புரிந்து கொள்வது எப்படி? என்பது பற்றி இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்

இளையோர் இறைநம்பிக்கையின் அடையாளங்களாக!

இளமைப் பருவம் ஒரு அசத்தலான பருவம். அறியா உலகைத் துருவிப்பார்க்கும் வேகம். ஆற்றலும் அறிவும் ஒன்றுசேரும் அரங்கம். சிறுபறவை, கருவறை திறந்து, சிறகை விரித்து, காற்றைப் பிளந்து, உயர்ந்து பறப்பது போல, உலகை தன் வசப்படுத்த, சுதந்திரக் காற்றை சுவாசிக்க, இலட்சியக் கனவுகளோடு பறக்கும் அசத்தலான பருவம் அது.

இளமைக்கு என்றுமே ஒரு மவுசு உண்டு, ஒரு தனிப்பட்ட மார்க்கெட் உண்டு! இந்தியாவைப் பொறுத்தமட்டில் அந்த மார்க்கெட் இன்று ஏறுமுகத்தில் உள்ளது. ஏனென்றால் உலகிலேயே அதிகமான இளையோரைக் கொண்ட நாடு இந்தியா. இவர்களின் சீரிய சிந்தனையும், புயல் வேகமும், செயல் விவேகமும், அறிவுக்கூர்மையும்;, நுணுக்கமான அறிவியல் அனுபவங்களும்  எப்படி முழுமையாக பயன்படுத்தபடுகிறது  என்று உன்னிப்பாக உற்றுபார்த்துக் கொண்டிருக்கிறது இந்த உலகம். இன்னும் ஒருசில ஆண்டுகளில் உலகிலேயே மிக இளமையான தேசமாக இந்தியா முன் நிற்கும் என்று இந்த உலகம் உணர்கிறது. இவ்விளையோர் நமது சமுதாயத்தில் பல அடையாளங்களின் சான்றாக வலம்வருகின்றனர். அவற்றுள் ஒருசில அடையாளங்களை காண்போம்.

1.     இளையோர் நட்பின் அடையாளம்

இளையோர் என்றாலே நட்புதான். நட்புக்கு இலக்கணம் என்று கூட சொல்லலாம். தன் உறவுகளோடு செலவிட்ட நேரத்தைவிட தன் நட்புகளோடு பயணித்த தருணங்கள்தான் அதிகம். அவர்களின் நட்புக்கு சாதியும் மதமும் ஒரு தடையல்ல. காதலியை விட நட்பை நேசித்தவர்கள் பல்லாயிரம். நட்பிற்காக பல்லாயிரம் மையில்கற்களைத் தாண்டியவர்களும் உண்டு. நண்பர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் ஆறாத் துயரிலும், நட்பை அறுவடை செய்யும் அடையாளங்கள்.

2.     இளையோர் பகுத்தறிவின் அடையாளம்

அரக்கப் பரக்க இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அதிநவீன உலகத்தில் ஆத்மார்த்தமான மனநிலையில் அறிவுப்பூர்வமாக சிந்தித்து பலம் எது பலவீனம் எது என்று பகுத்தறிந்து பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளையோர். ஒருமுறை மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் கூறினார், அமெரிக்காவில் உள்ள என்னுடைய நிறுவனத்திற்கு இந்திய இளையோர் வேலைப்பார்க்க வரவில்லையென்றால், நான் என்றோ என் நிறுவனத்தை இந்தியாவிற்கு மாற்றி இருப்பேன். ஆக, இளையோர் பகுத்தறிவின் அடையாளங்கள் என்பதில் ஐயமில்லை.

3.     இளையோர் சாதனைகளின் அடையாளம்

புதிய சமுதாயத்தின் சவாசல்களை இளையோருக்குத் திறந்துவிடுங்கள் என்றார் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால். இளையோர் சக்தி எதையும் செய்து முடிக்கின்ற காட்டாற்று வெள்ளம். வரலாற்றிலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, இளம் வயதில் சாதித்தவர்கள் அதிகம் உண்டு. இளையோரின் மனதில் சுதந்திர வேட்கையை விதைத்துச் சென்றபோது, பகத்சிங்கின் வயது இருபத்திநான்கு. பிரெஞ்சு நாட்டிற்கு ஜோன் ஆப் ஆர்க் வெற்றியைத் தேடிக் கொடுத்தபோது வயது பதினெட்டு. உலகையே புரட்டிப் போட்ட அலெக்சாண்டர் புறப்பட்டபோது வயது பதினாறு என்று தொடங்குகின்ற பட்டியல், கல்பனா சாவ்லா, சுனித்தா வில்லியம்ஸ், சாய்னா நெக்வால், பி.வி. சிந்து, மாரியப்பன், தங்கவேலு, சுந்தர்பிச்சை என்று இன்றும் தொடர்கிறது சாதனையின் அடையாளஙகள்.

4.     இளையோர் அதிகாரத்தின் அடையாளம்

ஜல்லிக்கட்டு நம் கண்ணெதிரே நிற்கும் மிகப்பெரிய இளையோர் எழுச்சியின் அடையாளம். அத்தோடு நின்று விடாமல் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக தங்களது ஒட்டுமொத்த குரலையும் பதிவு செய்து வருகின்றனர் நம் இளையோர்கள். பல ஏரிகளை, குளங்களை, வாய்க்கால்களைச் சீர்செய்து மக்களின் வாழ்வை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் செயல்வீரர்களாக மாறிவிட்டனர். இன்று அரசியல் பேசி, நல்லாட்சிக்காக இனி ஒரு விதிசெய்வோம் என்று தன் அதிகார ஏணிப்படிகளில் தடம் பதித்து நம் அனைவருக்குமே புதிய நம்பிக்கையை தாரை வார்த்து, இறைவன் கொடுத்ததை பல நூறு தாலந்தாக மாற்ற பொறுப்போடு வாழும் அதிகார அடையாளமாக மாறிவிட்டார்கள்.

இவ்வாறு இளையோரின் அடையாளச்சின்னங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இந்த அடையாள வரிசையில் சிலர் மட்டுமே இருக்கிறார்கள், பலர் இல்லை என்பது வரலாறு தரும் வருத்தமான சான்று. காரணம் இன்றைய இளையோரில் பலர் தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை உணராமல் இருப்பதும், அப்படியே உணர்ந்தாலும் அதைத் திட்டமிட்டு வளர்க்காமல் இருப்பதும், அப்படியே வளர்த்தாலும் அதனைச் சரியான வாய்ப்புத் தேடிப் பயன்படுத்தாமல் இருப்பது தடை. அதையும் தாண்டி மாமரங்களாக வளரும் இளையோர் அதை தாங்கிநிற்கும், அடித்தளமான வேர்களை மறந்து அதை பலப்படுத்தாமல் இருப்பதுதான் இன்றைய பெருந்தடை. தாங்கள் மீதும் தாங்கள் எடுக்கும் முயற்சி மீதும் நம்பிக்கை வைக்கும் இளையோர் அதன் தூண்டுதலை, தொடக்கத்தை, அடித்தளத்தை மறந்துவிட்டது தான் எதார்த்தம். இன்று முதியோர் இல்லங்கள் பெருகுவது, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு, சாதிமதம் என்ற சண்டைகள், ஆணவக்கொலைகள் என்று பெருகிவரும் அழிவுகள் அனைத்துமே நாம் நமது மையத்தை மறந்துவிட்டதுதான்.

பூக்களாக இருக்காதே உதிர்ந்துவிடுவாய் செடிகளாக இரு. அப்போது தான் பூத்துக் கொண்டே இருப்பாய்! - விவேகானந்தரின் பொன்மொழிகள் இவை. பூக்களாக புதிதாக புதுமையாக புது உலகம் படைக்க கனவு கண்ட இளையோர் இன்று செடிகளாக, மரங்களாக, வேர்களாக விஸ்வரூபம் எடுப்பது காலத்தின் அவசியம். அது அவர்கள் இறைநம்பிக்கையின் அடையாளங்களாக மாறும்போது தான் சாத்தியமாகும்.

5.     இறைநம்பிக்கையின் அடையாளங்களாக!

கிங் ஆப் கிங்ஸ் என்ற ஆங்கிலப்படம் சில வருடங்களுக்கு முன் வெளியாயிற்று. அதில் ஒருகாட்சி. நடக்க இயலாத ஒருவனை இயேசு நடக்கச் சொல்கிறார். அவன் தயங்குகிறான். எழுந்து நிற்கத் தடுமாறுகிறான். நடக்கத் துணிவில்லை. என்னால் எழுந்து நடக்க முடியுமா என்ற அவநம்பிக்கை. இதைப் பார்க்கிறார் இயேசு. அவர் அவனுக்குச் சொன்ன வார்த்தை, தம்பி, உன்னுடைய நம்பிக்கை உன் கால்களை விட பலவீனமாக இருக்கிறது. எனவே உன்னை நீ நம்பு. உன்னால் எழுந்து நடக்க முடியும். இவ்வார்த்தைகள் அவனது உள்ளத்தை ஈட்டியால் குத்தியது போன்ற உணர்வு. அவன் நம்புகிறான். துணிந்து எழுந்து நடக்க ஆரம்பிக்கிறான். என்னால் நிற்க முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு நடக்கத் துணிவுத் தந்தது. முதலில் சற்றுத் தடுமாறினாலும் பின்னர் சீராக நடக்க ஆரம்பிக்கிறான். இயேசுவின் செயல் தூண்டுகின்ற வார்த்தை அவனை ஊக்குவித்தது தான் அவனை நடக்க வைத்தது. சிலரைக் கொள்கைகள் ஊக்குவிக்கும், சிலரைச் செய்கைகள் ஊக்குவிக்கும், சிலரை ஆற்றல் நிறைந்த வார்த்தைகள் ஊக்குவிக்கும், ஆனால் அனைவரையும் உந்துவது நம்பிக்கை, இறைநம்பிக்கை. எப்பொழுது நாம் இறைவனோடு ஒன்றிணைகின்றோமோ அன்று நமது வேர்கள் வலுப்படும், செயல்கள் வளப்படும். இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் என்று திருப்பாடல் சொல்லுகிறது. இறைவனை மறந்தோம் என்றால் விண்வெளிக் கோள்கள் தன்கோட்டிலிருந்து இடம் பெயர்ந்தது போலாவோம். 2019 ஆம் ஆண்டு பானாமவில் நடக்கவிருக்கின்ற உலக இளையோர் தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்' என்ற தலைப்பில் சிந்திக்க இளையோருக்கு அழைப்புவிடுத்துள்ளார். அதற்கு அன்னை மரியாளை முன்மாதிரியாக கொடுத்திருக்கின்றார். பல இன்னல்களுக்கு, தோல்விகள், காயங்களுக்கு இடையே இறைவனை பற்றிக்கொண்டவள், இறைவனை தன் வாழ்வின் மையமாகக் கொண்டவள், இறைவன்தான் தன் வாழ்வின் அடித்தளம் என்றவள், இறைவனே சரணாகதி என்றவள், இறைநம்பிக்கையின் மிகப்பெரும்; அடையாளம் நமது அன்னை மரியாள். அவளின் அடிச்சுவற்றை பின்பற்றி இளையோர் உலகிற்கு ஒளியாக உப்பாக மாறவேண்டும், இறைநம்பிக்கையின் அடையாளங்களாக மாறவேண்டும் என்று உந்துகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'இளமை முதல் நற்பயிற்சியைத் தேர்ந்துகொள்

முதுமையிலும் ஞானம் பெறுவாய்' - சீராக் 6:18

ஆம் நமது நற்பயிற்சி இறைநம்பிக்கை பயிற்சியாக இருக்கட்டும். கியூபா, கொரியா, சிங்கப்பூர் நாடுகள் இளையோரின் சக்தியால் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் அவன் இன்றி எதுவும் அசையாது என்பதை மறந்துவிட வேண்டாம். நீங்கள் எதிர்கால திருச்சபையின் செல்வங்கள் என்று திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இளையோர் மேல் வைத்திருக்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுகிறார். எனவே இளைஞனே! உயர்ந்து பறக்கும்போது, உன் தொப்புள் கொடியை மறந்துவிடதே, உன்மையத்தை தொலைத்துவிடதே.

இறைநம்பிக்கையின் அடையாளங்களாக மாறுவோம்! கடவுள் உங்களை ஆசிர்வதித்து வழிநடத்துவாராக!!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

06/04/2017 15:57