2017-04-06 16:29:00

"கிரக்கோவிலிருந்து பானமாவுக்கு" – இளையோர் மாநாடு


ஏப்.,06,2017. கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகிப்பதோடு, எண்ணிக்கையிலும் அதிகம் உள்ள இளையோரை, திருத்தந்தையின் சார்பில் இக்கூட்டத்திற்கு வரவேற்கிறேன் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், இப்புதனன்று துவங்கிய ஒரு பன்னாட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.

2019ம் ஆண்டு பானமா நாட்டில் நிகழவிருக்கும் 34வது இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு தயாரிப்பாக, ஏப்ரல் 5, இப்புதன் முதல், 9, வருகிற ஞாயிறு முடிய, உரோம் நகரில் நடைபெறும் பன்னாட்டு இளையோர் மாநாட்டில், பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கெவின் பாரெல் (Kevin Farrell) அவர்கள், துவக்க உரை வழங்கியபோது இவ்வாறு கூறினார்.

"கிரக்கோவிலிருந்து பானமாவுக்கு – இளையோரோடு நடைபயிலும் ஆயர்கள் மாமன்றம்" என்ற தலைப்பில் நிகழும் இந்த பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொள்ள, 104 நாடுகளிலிருந்தும், 44 இயக்கங்களிலிருந்தும் ஏறத்தாழ 300 இளைய பிரதிநிதிகள் வந்துள்ளனர் என்று இத்திருப்பீட அவையின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஏப்ரல் 5, இப்புதனன்று மாலை திருப்பலியை தலைமையேற்று நடத்திய கர்தினால் பாரெல் அவர்கள், நற்செய்தியின் விழுமியங்களை வாழ்வில் கடைபிடிப்பவர்களாக இளையோர் இருப்பதே இவ்வுலகிற்கு அவர்கள் வழங்கக்கூடிய மிகச் சிறந்த சாட்சியம் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.