2017-04-06 16:36:00

சிக்காகோ மக்களின் அமைதிப் பேரணிக்கு திருத்தந்தையின் மடல்


ஏப்.,06,2017. சிக்காகோ நகர மக்கள் புனித வெள்ளியன்று மேற்கொள்ளும் அமைதிப் பேரணியில், தானும், மனதாலும், செபத்தாலும் இணைந்திருப்பேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிக்காகோ பேராயர், கர்தினால் Blase Cupich அவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிக்காகோ நகரில் பெருகிவரும் வன்முறைகளைக் களையும் ஒரு முயற்சியாக, கர்தினால் Cupich அவர்கள் அறிவித்துள்ள பேரணிக்கு தன் செபம் கலந்த ஆதரவைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, புனித வெள்ளியன்று, உரோம் நகர் கொலோசெயம் அரங்கில் தான் மேற்கொள்ளும் சிலுவைப்பாதையின் போது சிக்காகோ நகர மக்களை தன் மனதில் ஏந்தியிருப்பேன் என்று தன் மடலில் கூறியுள்ளார்.

இனம், பொருளாதாரம், சமுதாயப் பின்னணி என்ற பல கோணங்களில் மக்கள் பாகுபடுத்தப்படுகின்றனர் என்பதை இம்மடலில் கவலையோடு குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அயலவரை வேறுபடுத்திப் பார்க்கும் மனநிலையே, வன்முறைகளுக்கு வித்திடுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பழிக்குப்பழி, அடிதடி என்ற மோதல் முறைகளைத் தவிர்த்து, அன்பு வழியை வளர்ப்பதே, மனித குலத்தின் முக்கிய கடமை என்று, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கூறிய வார்த்தைகளை, தன் மடலில் மேற்கோளாகக் கூறியுள்ளத் திருத்தந்தை, ஓர் இறைவாக்கினரைப்போல, மார்ட்டின் லூத்தர் அவர்கள் வழங்கிய அறிவுரைக்குச் செவிமடுக்கும் அவசியம் இன்று உள்ளது என்று விண்ணப்பித்துள்ளார்.

வன்முறையற்ற அகிம்சை வழியை, மார்ட்டின் லூத்தர் அவர்கள் தொடர்ந்து கடைபிடித்ததைப் போல நாமும் இன்று கடைபிடித்தால், இவ்வுலகம் அமைதியைக் காணும் என்றும், அன்பு என்ற சக்திக்கு முன் அனைத்தும் அடிபணியும் என்பதை அடுத்த தலைமுறைக்குச் சொல்லித்தர நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றும் சிக்காகோ பேராயருக்கு எழுதிய இம்மடலின் இறுதியில் திருத்தந்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.